இறக்கம் கண்டு ஏறிய சொமேட்டோ நிறுவனத்தின் பங்கு: பின்னணி விளக்கும் நிபுணர்

இறக்கம் கண்டு ஏறிய சொமேட்டோ நிறுவனத்தின் பங்கு: பின்னணி விளக்கும் நிபுணர்
இறக்கம் கண்டு ஏறிய சொமேட்டோ நிறுவனத்தின் பங்கு: பின்னணி விளக்கும் நிபுணர்

சொமேட்டோ நிறுவனம் ட்விட்டர் வாயிலாக மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விற்பனை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தபோது, அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாமல் போயுள்ளது. இதனால் அவர் சொமேட்டோவின் வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூறியுள்ளது.

உடனே விகாஷ், ‘தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். அதற்கு அந்நிறுவன ஊழியர், ‘இந்தி நாட்டின் தேசிய மொழி. இந்தியர்கள் அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என பதில் அளித்துள்ளார். இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து விகாஷ் தனது சமூகவலைதளங்களில் பதிவிடவே, சொமேட்டோவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர்.

மேலும் #RejectZomato என்கிற ட்வீட் இன்று காலை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் சொமேட்டோ பங்குகள் சரிவுடன் தொடங்கியது. இன்று காலை தேசிய பங்கு சந்தையில் 144.05 என்கிற புள்ளியுடன் தொடங்கிய சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் காலை 10:10 அளவில் 138.45 என்கிற குறியீட்டுக்கு பங்குகள் குறைந்தது. அதாவது 2.57% பங்குகள் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்த நிலையில் காலை 10:30 மணிக்கு ட்விட்டரில் சொமேட்டோ நிறுவனம் மன்னிப்புக் கடிதம் வெளியிட்டது. அதில் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் தவறான கருத்தை பதிவிட்ட நபர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவும், மொழியும் மக்களின் உணர்வு என புரிந்து கொண்டதாக சொமேட்டோ சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் வீழ்ந்திருத்த சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் சற்று ஏற்றம் பெற்று வருகிறது. மதியம் 1 மணிக்கு மீண்டும் 141.80 என்கிற குறியீட்டுக்கு பங்குகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர் ராம ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். “மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள், சமூக அழுத்தம் மிக்க செயல்களில் ஈடுபடும்போது, பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு.

கோகோ கோலா, பெப்சி, பேர் அண்ட் லவ்லி போன்ற நிறுவனங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளன. சந்தையில் Speculative traders நாள் தோறும் ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதும், விற்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சொமேட்டோ நிறுவனத்தின் மீதான விமர்சனங்களை அடுத்து, Speculative traders நம்பிக்கை இழந்து காலை சொமேட்டோ பங்குகளை விற்றுள்ளனர். இதனால் காலையில் சரிவுடன் தொடங்கிய சொமேட்டோ பங்கு நண்பகலில் சற்றே அதிகரித்து வருகிறது. சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கடிதம் கொடுக்க கால தாமதம் ஆக்கியிருந்தால் அதன் பங்குகள் மேலும் சரிவடைய வாய்ப்பிருந்திருக்கும். அதை தவிர்க்கவே சொமேட்டோ நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கலாம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘இது போன்ற நிகழ்வுகள் நீட்சியடையும்போது பங்கு சந்தையில் Long term வாடிக்கையாளர்கள் நிறுவனம் மீது நம்பிக்கை இழக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்கவே மிக விரைவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

இப்படியாக பங்குகள் உயர்ந்த நிலையில், அந்நிறுவனம் அந்த ஊழியரை மீண்டும் பணி அமர்த்தியிருப்பதியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், ''ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ அறியாத ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருக்கிறது. நாட்டின் சகிப்புத்தன்மை தற்போது இருப்பதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். யாரை குறைக்கூறுவது?. அதேபோல அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல" எனக் கூறினார்.

- ந.பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com