இன்னும் 29 நாட்களே உள்ளன... நடப்பு நிதி ஆண்டில் LIC-ன் IPO சாத்தியமா?

இன்னும் 29 நாட்களே உள்ளன... நடப்பு நிதி ஆண்டில் LIC-ன் IPO சாத்தியமா?
இன்னும் 29 நாட்களே உள்ளன... நடப்பு நிதி ஆண்டில் LIC-ன் IPO சாத்தியமா?

நடப்பு நிதி ஆண்டுக்குள் எல்.ஐ.சி ஐபிஓ வெளியாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார். ஆனால் நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

மார்ச் மாதம் ஐபிஓ வெளியாகும் என்று சொல்லிவந்தாலும் நிச்சயமற்ற சூழல் இருப்பதால் சாத்தியமா என்னும் சந்தேகம் இருக்கிறது. முதலில் இன்னும் செபியின் அனுமதி இதற்கு கிடைக்கவில்லை. செபியின் அனுமதிக்காக விண்ணப்பித்து சில வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் செபி அனுமதி கொடுக்கவில்லை. செபியும் மத்திய அரசின் இதற்கான பிரிவும் (டிஐபிஏஎம்) இணைந்து செயல்பட்டு வருகின்றன. மார்ச் முதல் வாரத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.ஐ.சி. ஐபிஓ கால தாமதமாகும் என கடந்த டிசம்பர் மாதமே ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அப்போது மத்திய அரசு இதனை ஊகம் என நிராகரித்தது. தற்போது சர்வதேச அரசியல் சூழல் காரணமாக எல்.ஐ.சி. ஐபிஓ மீண்டும் தள்ளிப்போகும் என சந்தை வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

முதலீட்டாளர்களின் கவனத்தை பெறுவதற்கு `ரோடு ஷோவினை’ எல்.ஐ.சி. தொடர்ந்து செய்து வருகிறது. பல சர்வதேச முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கு ஏதுவாக காப்பீட்டு துறையில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்டிஐ.) மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.

ஒரு பக்கம் ஐபிஒவுககான பணிகள் நடந்து வந்தாலும், சர்வதேச சூழல் ஐபிஓவுக்கு சாதகமாக இல்லை என முதலீட்டாளர்கள் பலரும் கருதுகின்றனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களும் தயக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போதைய சூழலில், புதிய முதலீட்டை செய்வதற்கு முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள். சர்வதேச சூழல் காரணமாக ஏற்கெனவே செய்துள்ள முதலீட்டை மாற்றி அமைக்கவே முதலீட்டாளர்கள் விரும்புவார்களே தவிர, புதிய முதலீட்டை செய்ய மாட்டார்கள். நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுக்குள் ஐபிஓவை கொண்டுவருவதை விட சரியான சந்தை மதிப்பில் பட்டியலிடுவதுதான் முக்கியம்.

ரஷ்யா உக்ரைன் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால், பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை இருக்கும். முதலீட்டாளர்களின் விருப்ப பங்காக எல்.ஐ.சி இருக்காது என்றும் வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், எல்.ஐ.சி திரட்டும் தொகை அதிகம் என்பதால், சரியான சந்தை மதிப்பு இல்லை எனில் முதலீட்டாளர்களின் தேவை குறைவாக இருக்கும். இந்த சூழலில் சரியான சந்தை மதிப்பு கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் ஐபிஓ அல்லது எப்பிஓ வெளியாகும்போது, அந்த வெளியீடு வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெளியீட்டின்போதும் எல்.ஐ.சி. முதலீடு செய்யும். ஆனால் எல்.ஐ.சி.கூடுதல் தொகையை திரட்டுவதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அல்லது உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டுமே போதாது. வெளிநாடு முதலீட்டாளர்களின் பங்களிப்பும் தேவை என்பதால் சாதமாக சூழல் இருக்க வேண்டும் என சர்வதேச முதலீட்டாளர்கள் கருதுவதாக தெரிகிறது.

பங்கு விலக்கல் இலக்கு!

எல்.ஐ.சி. என்பது 100 சதவீதம் மத்திய அரசு நிறுவனமாகும். இதில் ஐந்து சதவீத பங்குகளை விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.60000 கோடி முதல் ரூ.65,000 கோடி வரை திரட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியாகவில்லை என்றால் பங்கு விலக்குலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடைய முடியாது.

நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பட்ஜெட்டில் இதற்காக இலக்கு ரூ.78,000 கோடியாக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ரூ.12000 கோடி மட்டுமே மத்திய அரசு திரட்டி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

எல்.ஐ.சி.யின் ஐபிஓவுக்காக பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. செபியின் அனுமதி பெற்று, ஆனால் இன்னும் ஐபிஓ வெளியிடாத சில நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கும் உக்ரைன் என்பது முக்கியமான பிரச்னைதான். ஆனால் எல்.ஐ.சி. ஐபிஓவின் முடிவுக்காக காத்திருக்கின்றன என்பதும் உண்மை.

நடப்பு நிதி ஆண்டு முடிவடைய இன்னும் 29 வேலை நாட்கள் இருக்கும் சூழலில் எல்.ஐ.சி. ஐபிஓ வெளியாகுமா?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com