இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?

இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
Published on

`என் கல்யாணத்தப்ப ஒரு சவரன் தங்கமே 2,000 ரூபாய் தான். அப்பவே தங்கத்த வாங்கிப் போடுங்கன்னு என் புருசன்கிட்ட சொன்னேன்...’ என நம் பெற்றோர் நம்மிடமோ உறவினர்களிடமோ சொல்லிக் கேட்டிருப்போம். இவர்கள் சொல்வதை ஒரு கணக்கீட்டுக்காக ஒரு அளவுகோளை எடுத்துக் கொள்வோம். 1989-ஆம் ஆண்டு 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 3,140 ரூபாய் என்கிறது பேங்க் பசார் வலைதளம். கடந்த 2022 ஏப்ரல் 18ஆம் தேதி அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 55,060 ரூபாயைத் தொட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 59,000 ருபாய் வரை தொட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த 33 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 18 மடங்கு அதிகரித்திருக்கிறது. தங்கத்தின் விலை மட்டும் ஏன் இத்தனை பெரிய பாய்ச்சல் காண்கிறது? இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது?

பொதுவாக தங்க ஆபரணங்களின் விலை, செய்கூலி, சேதாரம், ஜி எஸ் டி வரி போன்ற சில நிலையான செலவீனங்களைத் தாண்டி, தங்க உலோகத்தின் விலை, இந்திய சமூக கட்டமைப்பு உட்பட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

கல்வி போல தங்கம் - சமூக அந்தஸ்து: தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்திடம் சென்று, கல்விக்கு எல்லாம் இத்தனை செலவு செய்யாதீர்கள். பிள்ளைகளை கட்டணம் குறைவான பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என சொல்லிப் பாருங்கள். வீடே இரண்டாகிவிடும். குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் எதையும் இழக்கத் தயாராக இருப்பர். காரணம் அவர்கள் குழந்தையின் கல்வி வெறுமனே அறிவு சார்ந்த விஷயமல்ல. குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோரின் கெளரவம், சமூக அந்தஸ்து, சக மனிதர்கள் கொடுக்கும் அழுத்தம், பெற்றோரின் கடமை, நாளை குழந்தைகள் தங்களை நல்ல பள்ளியில் படிக்க வைக்கவில்லை என தங்களை குறை கூறிவிடக் கூடாது என பெற்றோருக்கு இருக்கும் அச்சம்... என பல காரணிகள் இருக்கின்றன.

அதே போலத் தான் இந்திய சமூகத்தில் தங்கமும் இருக்கிறது. எத்தனை ஏழை வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் சரி, மாட மாளிகையில் வாழும் பெண்ணாக இருந்தாலும் சரி தங்கம் பயன்படுத்துவதை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ஒரு பெண்ணை எத்தனை பவுன் நகை போட்டு கட்டிக் கொடுத்தார்கள் என்பது ஒரு சமூக அந்தஸ்தாகவே இந்த நொடி வரை பார்க்கப்படுகிறது. திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டுக்குச் செல்லும் பெண் எத்தனை சவரன் தங்கத்தோடு வருகிறார் என்பதையும் ஒரு கெளரவமாகப் பார்க்கப்படுகிறது. முற்போக்காக தங்க நகைகளை அணியாத நடுத்தர பெண்களை மக்கள் கேலி செய்வதையும் நாம் கடந்து வந்திருப்போம்.

இவையனைத்தும் சேர்ந்து தங்கத்துக்கான தேவையை இந்தியா எப்போதுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பொருளுக்கான தேவை அதிகமாகவும், சப்ளை குறைவாகவும் இருக்கும் போது, அதன் விலை அதிகமாகத் தானே இருக்கும். அது தான் தங்கத்துக்கான தேவையையும், விலையையும் சரிய விடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்திய கலாசாரத்தில் இருந்து உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிந்தது போல, திருமணத்தின் போது பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டார் தங்கம் போடும் பழக்கம் மட்டும் ஒழிந்தால், சர்வதேச அளவில் தங்கம் விலை தரை தட்டும் என எதிர்பார்க்கலாம்.

உள்நாட்டு வரி விதிப்பு: இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. 95 - 99 சதவீத தங்கம் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு இந்திய அரசு கூடுதல் வரி விதிக்கிறது. ஏற்கனவே 10.75 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்படி அவ்வப்போது அரசு விதிக்கும் வரிகள் தங்கத்தின் விலையை உடனடியாக பாதிக்கும்.

சர்வதேச அளவில் தங்கம் விலை: சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் (XAU - USD : CUR) விலை 1,811 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இந்தியா தனக்குத் தேவையான பெரும்பாலான தங்கத்தை இறக்குமதி செய்வதால், இங்கு தங்கம் விலை அதிகரித்தால், அது இந்திய சந்தையிலும் பலமாக எதிரொலிக்கும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு: உலகில் பெரும்பாலான நாடுகள், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை அமெரிக்க டாலர் கரன்சியை அடிப்படையாக வைத்துதான் மேற்கொள்வர். இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்துக்கும் அமெரிக்க டாலரில் தான் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்.

உதாரணம் 1: சர்வதேச அளவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1 டாலர்.
$1 = 70 ரூபாய். முதலில் 70 ரூபாய் கொடுத்து 1 டாலரை வாங்கி, பிறகு ஒரு கிராம் தங்கத்தை வாங்கிவிடலாம்.

உதாரணம் 2: சர்வதேச அளவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதே 1 டாலர்
$1 = 80 ரூபாய். முதலில் 80 ரூபாய் கொடுத்து 1 டாலரை வாங்க வேண்டும், பிறகுதான் ஒரு கிராம் தங்கத்தை வாங்க முடியும்.

ஆக தங்கத்தின் விலை அதிகரிக்கவில்லை. ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவினால் மட்டும், இந்தியர்கள் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டியுள்ளது.

ஒவ்வொரு வாரமும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய பாதாளத்தைக் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம்.

மாற்று முதலீட்டுச் சாதனம்: கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் பங்குச் சந்தை எல்லாம் தரை தட்டியது. அரசாங்கங்கள், தங்களின் வட்டி விகிதத்தைத் குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினர். எனவே வட்டி வருமானம் கொடுக்கும் சாதனங்களும் நல்ல வருமானம் கொடுக்காதென முதலீட்டாளர்கள் கணிசமாக தங்கத்தில் முதலீடு செய்தனர். அது தங்கத்தின் விலையை தாறுமாறாக உயர்த்தியது.

சமீபத்தில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் அதிகரித்து தற்போது 1.75 சதவீதமாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி கூட தன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களை கணிசமாக ஈர்த்துள்ளதால், தற்போது பல நாட்டு பங்குச் சந்தைகள் ஏற்றம் காணாமல் தவிக்கும் போதும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல், வட்டி வருமானம் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதாக பொருளாதாரப் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளது.

இப்படி முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்துக்காக தங்கத்தில் பணத்தை முதலீடு செய்வதும், விற்று வெளியேறுவது கூட இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையை பாதிக்கிறது. இது போக, சர்வதேச அரசியல் சூழல், உக்கிரமான போர், கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நெருக்கடி... ஏற்படும் போது கூட தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். ஆகையால் தான் தங்கம் விலை எப்போது ஏறும் இறங்கும் என எவராலும் உறுதியாகக் கூற முடிவதில்லை.

- கெளதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com