PT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்?

PT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்?
PT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்?

சில ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் என்பது ஆப்ஷனலாக இருந்தது. ஆனால், தற்போது மொபைல் என்பது அத்தியாவசியமான தேவையாக மாறி இருக்கிறது. வீட்டுக்கு ஒரு போன் என்னும் நிலையில் இருந்து ஒருவருக்கு இரண்டு செல்போன் என்னும் நிலை உருவாகி வருகிறது. இருந்தாலும் சில நாள்களுக்கு முன்பு ஸ்மார்ட்போன் பிரிவை மூடுவதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதன் பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

2002-ம் ஆண்டு ஸ்மார்ட்போன் பிரிவை எல்.ஜி. தொடங்கியது. காலத்துக்கு ஏற்ப புதிய மாடல்களை அறிவித்து வந்தாலும், இதர நிறுவனங்களுடன் போட்டிபோட முடியவில்லை. தவிர, இந்தப் பிரிவை வாங்குவதற்கு முதலீட்டாளர்களோ அல்லது இதர நிறுவனங்களோ முன்வராத காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி. அறிவித்திருக்கிறது. போக்ஸ்வேகன் மற்றும் வின்குரூப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், செல்போன் பிரிவை விற்கும் முயற்சி தோல்வியடைந்தது.

சந்தை எப்படி இருந்தது?

வட அமெரிக்காவில் முக்கியமான நிறுவனமாக எல்.ஜி. இருந்து வந்தது. ஆப்பிள் மற்றும் சாம்சங்குக்கு பிறகு மூன்றாவது பெரிய நிறுவனமாக எல்.ஜி. திகழ்கிறது. ஒட்டுமொத்த அமெரிக்க சந்தையில் 10 சதவீதம் எல்.ஜி வசம் இருக்கிறது. தற்போது எல்.ஜி. வெளியேறி இருப்பதால், இரு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியாக அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தை மாறி இருக்கிறது.

அமெரிக்காவில் மூன்றாவது நிறுவனமாக இருந்தாலும் சர்வதேச அளவில் வெறும் 2 சதவீத ஸ்மார்ட்போன் சந்தையை மட்டுமே எல்.ஜி. வைத்திருக்கிறது. இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருள் (டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி) பிரிவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக எல்.ஜி இருக்கிறது. ஆனால், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 0.30% சந்தையை மட்டுமே எல்.ஜி. வைத்திருக்கிறது. வளர்ந்து வரும் சந்தையான இந்தியச் சந்தையில் எல்.ஜியால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

எல்.ஜி. நிறுவனத்தின் இந்திய பிரிவு வருமானம் (2020-ம் நிதி ஆண்டு) ரூ.15,709 கோடியாகும். ஆனால், இதில் ஸ்மார்ட்போன் பிரிவின் வருமானம் என்பது ரூ.190 கோடி மட்டுமே. தவிர, இந்தப் பிரிவு லாபத்திலும் இயங்கவில்லை. இந்தப் பிரிவின் நஷ்டம் மட்டும் ரூ.91 கோடி என எல்.ஜி.யின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. எல்.ஜி.-யின் மற்ற அனைத்துப் பிரிவுகளும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் மட்டுமே நஷ்டத்தை சந்தித்தது.

இந்திய சந்தையில் எல்.ஜி என்னும் பிராண்டுக்கு மதிப்பு இருந்தாலும், ஸ்மார்ட்போன் விற்பனையில் எந்த தாக்கத்தை அந்த பிராண்ட் ஏற்படுத்தவில்லை. ஒருபுறம் குறைந்த விலையில் உள்ள சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், மறுபுறம் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட அதிகவிலையுள்ள ஸ்மார்ட்போன்கள் என சந்தை இருந்த நிலையில், எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்பதில் எல்.ஜிக்கு சிக்கல் இருந்தது. தவிர, சீன நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போனை சந்தைபடுத்துதலில் எல்.ஜி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே இந்த துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன் பிரிவுக்கு புதிய தலைமையை நியமனம் செய்து, புதிய அறிமுகங்கள் செய்தாலும் சந்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சீன நிறுவனங்கள் இ-காமர்ஸ் மூலமான விற்பனையில் கவனம் செலுத்தின. ஆனால், எல்.ஜி. மிக தாமதமாக இ-காமர்ஸில் கவனம் செலுத்தியது.

இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 450 கோடி டாலர் அளவுக்கு ஸ்மார்ட்போன் பிரிவு நஷ்டத்தை சந்தித்தது. அதனால் சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தது எல்.ஜி.

நோக்கியா, ஹெச்டிசி மற்றும் பிளாக்பெரி உள்ளிட்ட நிறுவனங்களும் கூட பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. ஆனால், அவை சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கவில்லை. ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறும் முதல் நிறுவனம் எல்.ஜி. வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் இந்தப் பிரிவு மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்தப் பிரிவின் பணியாளர்களை நீக்கப்போவதில்லை என்றும், வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எல்.ஜி அறிவித்திருக்கிறது. இந்தியாவிலும் 100-க்கும் குறைவான பணியாளர்களே இருப்பதால் இவர்களும் இதர பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்.

தற்போது சந்தையில் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் வரை விற்பனை செய்யப்படும். தவிர, ஸ்மார்ட்போன் பிஸினஸை மூடினாலும் மாடல்களை பொறுத்து மூன்று ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர்ட் அப்டேட் செய்யப்படும். அதேபோல செல்போன் பழுது மற்றும் உதிரி பாகங்களும் (பேட்டரி, சார்ஜர், ஹெட்போன் உள்ளிட்டவை) அடுத்த சில ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்றும் எல்.ஜி. அறிவித்திருக்கிறது.

அடுத்து என்ன?

ஸ்மார்ட்போன் பிரிவில் போட்டி அதிகமாக இருப்பதால், அதை மூட வேண்டியிருக்கிறது. அதேசமயம் அதிக வாய்ப்புள்ள துறைகளில் கவனம் செலுத்த இருக்கிறோம் என எல்.ஜி அறிவித்திருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள், ஸ்மார்ட் ஹோம்ஸ், ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ், ரோபாட்டிக்ஸ், பிஸினஸ் டு பிஸினஸ் சொல்யூஷன்ஸ் என வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பிரிவுகளில் கவனம் செலுத்த இருப்பதாக எல்.ஜி. தெரிவித்திருக்கிறது.

தொழிலின் அத்தனைப் பிரிவுகளும் வெற்றியடைய வேண்டும் என்னும் அவசியமில்லை. ஒரு சில பிரிவுகளில் சிக்கல் இருந்தால், அதனை விட்டுவிட்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்வது ஒன்றும் தவறான முடிவு கிடையாது. ஸ்மார்ட்போன் பிரிவு தோற்றுவிட்டடாலும், அடுத்து எடுக்கும் முயற்சிகளுக்கு ஹோம் அப்ளையன்ஸ் பிரிவில் கிடைத்த வெற்றி கிடைக்கட்டும்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com