கேட்டது ரூ.300க்கு ஸ்கின் லோஷன்; வந்தது விலையுயர்ந்த ஹெட்போன் - அமேசான் குளறுபடி!
ரூ.300 மதிப்புள்ள பொருளை ஆர்டர் செய்த நபருக்கு ரூ.19ஆயிரம் மதிப்புள்ள பொருளை அமேசான் மாற்றி அனுப்பியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இணையதளம் வழியாக வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. நம்ப முடியாத ஆஃபர்களும் ஆன்லைன் ஷாப்பிங் மோகத்திற்கு முக்கிய காரணம். ஆனால் அவ்வப்போது ஆன்லைன் ஷாப்பிங் சில சிக்கல்களையும் உண்டாக்கிவிடுகிறது. செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல் வருவதும், அளவு சரியில்லாத உடைகளை அனுப்புவதும் என சில சர்ச்சைகளிலும் இவை சிக்கிவிடுகின்றன.
அதேபோல் தற்போது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தன்னுடைய நுகர்வோர் ஒருவருக்கு கேட்ட பொருளை அனுப்பாமல் வேறு பொருளை அனுப்பி வைத்துள்ளது. அமேசானின் இந்த தவறால் அந்த நுகர்வோர் வருத்தப்படவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறார். கவுதம் என்ற நபர் அமேசானில் ரூ.300 மதிப்புள்ள ஸ்கின் லோஷனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெட்போன் தவறுதலாக வந்துவிட்டது.
கவுதம் ஆர்டர் செய்த பொருள் ரூ.300 மதிப்புடைய நிலையில், அவருக்கு வந்த ஹெட்போனின் மதிப்பு 19ஆயிரம் ரூபாய். இது தொடர்பாக கவுதம் அமேசானை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அவர்கள் இது திரும்ப பெறும் வசதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவுதம் பதிவிட்டுள்ளார். அவருக்கு பதில் அளித்துள்ள பலரும் ஆன்லைன் ஷாப்பிங் உடனான தங்களது அனுபவங்களையும் தெரிவித்துள்ளனர்.