ஓவர் நைட்டில் ஓஹோந்திரனாக்கும் NFT... யார் முதலீடு செய்யலாம்?

ஓவர் நைட்டில் ஓஹோந்திரனாக்கும் NFT... யார் முதலீடு செய்யலாம்?
ஓவர் நைட்டில் ஓஹோந்திரனாக்கும் NFT... யார் முதலீடு செய்யலாம்?

சமீபகாலமாக என் எஃப் டி என ஒரு விஷயம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு நல்ல என் எஃப் டி கையில் சிக்கினால் போதும் ஷார்ஜாவில் செட்டிலாகி ஷேக் ஆகிவிடுவேன் என பலரும் காத்துக் கிடக்கிறார்கள். அதென்ன என் எஃப் டி? உண்மையிலேயே என் எஃப் டி-க்கள் அத்தனை மதிப்பு மிக்கவைகளா? நம்பி முதலீடு செய்யலாமா?

என் எஃப் டி (NFT) ஓர் எளிய அறிமுகம்:

எதார்த்த உலகத்தில் இருக்கும் கலை, இசை, விளையாட்டுக் காணொளி போன்றவைகளைப் பிரதிபலிக்கும் ஒரு டிஜிட்டல் சொத்தே Non Fungible Token எனப்படும் என் எஃப் டி. பொதுவாக என் எஃப் டிக்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக, குறைந்த எண்ணிக்கை கொண்டதாக, அதை அடையாளம் காணும் கோட்களோடு இருக்கும். கிராஃபிக்ஸ் படைப்புகள், ஜிஃப்கள், ட்விட்டர் பதிவுகள், விளையாட்டு நிகழ்வு சார் காணொளிகள், சேகரித்து வைக்கப்படக் கூடிய கலைப்படைப்புகள், வெர்ச்சுவல் அவதாரங்கள், வீடியோ கேம் ஸ்கின்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்னீக்கர் காலணிகள்,
இசைப் படைப்புகள்.... போன்றவைகளை என் எஃப் டிக்களுக்கான உதாரணமாகக் கூறலாம்.

என் எஃப் டிக்களை இணையத்தில் வாங்கவும் விற்கவும் முடியும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை எப்படி தொட்டு உணர முடியாத டிஜிட்டல் சொத்தாக இருக்கிறதோ, அதே போல என் எஃப் டி-க்களையும் தொட்டு உணர முடியாத ஒரு டிஜிட்டல் சொத்து.

என் எஃப் டிக்களைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருக்க முடியும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்தான் என் எஃப் டி-க்களின் பரிமாற்றங்கள் நடக்கின்றன. எனவே அதை வைத்து ஒரு என் எஃப் டி படைப்பின் தற்போதைய உரிமையாளரை எளிதில் சரி பார்க்கலாம். என் எஃப் டி பரிவத்தனைகள் கணிசமாக கிரிப்டோகரன்சிகளில் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

2014ஆம் ஆண்டு முதல் என் எஃப் டிக்கள் உலகில் பரவலாக வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் வருகின்றன. 2021ஆம் ஆண்டில் மட்டும் என் எஃப் டி-க்களின் சந்தை சுமார் 41 பில்லியன் டாலரைத் தொட்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாபாரம் எப்படி:

என் எஃப் டிக்கள் டிஜிட்டல் உலகில் ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கும். அது தான் என் எஃப் டி வியாபாரத்தின் அடிநாதம். உதாரணத்துக்கு: ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒன்றை உங்களிடம் விற்றுவிட்டார். அதை கேட்டுப் பார்த்தால் அத்தனை அருமையாக இருக்கிறது. இதை இணையத்தில் பதிவேற்றினால் 10 மில்லியன் வியூஸ் கேரண்டி என தோன்றுகிறது.

இந்த பாடலை நீங்கள் வெளியிடாத வரை எவராலும் பதிவேற்ற முடியாத தனித்தன்மை இருக்கிறது என்றால், இதை வாங்க தயாரிப்பு நிறுவனங்கள், சினிமா கம்பெனிகள் போட்டி போடுவார்கள் தானே. அதே அடிப்படையில் தான் என் எஃப் டி டிஜிட்டல் சொத்துக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி விற்கப்படுகின்றன.

இதை போரடிக்கும் பொருளாதார சமன்பாட்டின் படி கூற வேண்டுமானால், ஒரு பொருளுக்கு டிமாண்ட் இருக்கும் போது, அதன் விநியோகம் குறைவாக இருந்தால், அதன் விலை அதிகரிக்கும். டிஜிட்டல் கலைஞரான மைக் விங்கிள்மேன், 2021 ஆம் ஆண்டின் மிகப் பிரபலமான என் எஃப் டி-யை உருவாக்கினார். அவரது 'எவரிடேஸ்; தி பர்ஸ்ட் 5000 டேஸ்' என்கிற டிஜிட்டல் படைப்பை கிறிஸ்டிஸ் ஏல நிறுவனத்தின் வழி சுமார் 69 மில்லியன் டாலருக்கு விற்றார். இது முதலீட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் உலகத்தை என் எஃப் டிக்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

பாதுகாப்பு அம்சங்கள்:

என் எஃப் டி டிஜிட்டல் படங்களை இணையத்தில் இலவசமாகப் பார்க்கலாம். மிஞ்சிப் போனால் ஒரு ஸ்கிரீன்ஷாட் கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லது பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். அதைவிடுத்து ஏன் ஒரு டிஜிட்டல் படத்துக்கு இத்தனை மில்லியன் கொட்டிக் கொடுத்து வாங்குகிறார்கள்?

காரணம் அதன் ஒரிஜினாலிட்டி. நம்மால் ராஜா ரவிவர்மா, எம் எஃப் ஹுசேன், உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் என எதை வேண்டுமானாலும் இணையத்தில் பார்க்கவோ, பதிவிரக்கவோ முடியும். ஆனால் அந்த உண்மையான படங்களுக்கான மதிப்பு என்றுமே குறைந்ததில்லை அல்லவா? அதே போல என் எஃப் டிக்களின் ஒரிஜினல் படைப்புகளுக்கும் எப்போதும் ஒரு மதிப்பு இருக்கிறது.

என் எஃப் டி உலகில், ஒரு அசல் படைப்பை ஒருவர் சொந்தமாக வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு என் எஃப் டியிலும் டி எஸ் சி என்றழைக்கப்படும் ஒரு டிஜிட்டல் கையெழுத்து இருக்கும். எனவே என் எஃப் டிக்களை கரன்சிகளைப் போலவோ, கிரிப்டோகரன்சிகளைப் போலவோ நினைத்த நேரத்தில் பரிமாற்றம் செய்ய முடியாது.

எனவே, சுருக்கமாக, என் எஃப் டிக்களை விலை கொடுத்து வாங்குவோர்கள், அப்படைப்பை விட, அதன் உரிமைகளைத் தான் வாங்குகிறார்கள்.

பயன்பாடு என்ன?

ஒரு கலைஞன் தன் படைப்புகளை வெளிப்படுத்த அரங்குகளையோ, தன் படைப்புகளை விற்று பணமாக்க ஏல நிறுவனங்களையோ நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.

இதற்கு பதிலாக கலைஞர்கள் தங்கள் படைப்புகளை ஒரு என் எஃப் டியாக மாற்றி, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்றுவிடலாம். அதில் அப்படைப்பின் கலைஞர் தனது டிஜிட்டல் கையெழுத்தை சேர்த்துவிட்டால், தன் படைப்பில் கையெழுத்திட்டது போலாகிவிடுகிறது.

இப்போதைய நடைமுறைகளில், ஒரு கலைஞர், தன் படைப்பை ஒரு முறை விற்றுவிட்டால் அதன் பிறகு அதிலிருந்து கலைஞர்களுக்கு எந்தவித பணமோ ராயல்டியோ கிடைக்காது.

என் எஃப் டியைப் பொறுத்த வரை, அதில் ராயல்டி விவரங்களையும் புரோகிராம் செய்து வைக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு கலைப்படைப்பை ஒருவர் வாங்கி, சிறிது நாட்கள் கழித்து மற்றொருவருக்கு அதை விட அதிக விலைக்கு விற்கும் போது, விற்பனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கலைஞர்களுக்கு ராயல்டியாக கிடைக்கச் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு கலைப்படைப்பை உருவாக்கிய கலைஞருக்கு, அப்படைப்பு ஒவ்வொரு முறை கைமாறும் போதும் ராயல்டி வருமானம் கிடைக்கும்.

சாமானியர்கள் முதலீடு செய்யலாமா?

டிஜிட்டல் கலைப்படைப்புகள் குறித்து நல்ல புரிதல் உள்ளவர்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளை கையாள்பவர்கள் என் எஃப் டிக்களில் முதலீடு செய்யலாம். சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும் ஓரளவுக்காவது புரிதல் உள்ளவர்களாக இருந்தால் நலம்.

என் எஃப் டிக்களும் கிரிப்டோக்களைப் போல இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டத்தின் கீழ் வருகிறது, அதை யார் நெறிமுறைப்படுத்துகிறார்கள் என எதுவும் தெரியவில்லை.

அது போக, கிரிப்டோகரன்சிகளிலாவது இன்று இது தான் விலை என ஒரு அடிப்படை விவரமாவது கிடைக்கும். ஆனால் என் எஃப் டியில் இந்த படைப்புக்கு என்ன விலை என உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. 1,000 டாலர் (சுமார் 77,000 ரூபாய்) கொடுத்து 10 பைசா கூட தேராத படைப்பை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், கலைப்படைப்பு குறித்து ஆழமான புரிதல் இல்லாதவர்கள் என் எஃப் டிக்களில் முதலீடு செய்வதற்கு முன் 100 முறை ஆலோசித்து முதலீடு செய்யுங்கள்.

கட்டுரை - கெளதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com