ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையை எட்டும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாப வரம்பு உயர்ந்திருப்பதால் பங்கின் விலை உயர்ந்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 27ஆம் தேதி வர்த்தகத்தின் போது 52 வார உச்சபட்ச விலையான ரூ.2828 என்னும் விலைக்கு ரிலையன்ஸ் பங்கு வர்த்தகமானது. வர்த்தகத்தின் முடிவில் ரூ.2778 என்னும் விலையை முடிந்தது. உச்சபட்ச விலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19.03 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த பங்கு 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் 40 சதவீதத்துக்கு மேல் இந்த பங்கு உயர்ந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.13 லட்சம் கோடியாக இருக்கிறது. நிப்டியின் பங்களிப்பில் ரிலையன்ஸ் 12 சதவீத பங்களிப்பு செய்கிறது. சில புரோக்கிங் நிறுவனங்கள் 3170 ரூபாய் வரையிலும் இந்த பங்கு செல்லக்கூடும் நடுத்தர காலத்தில் செல்லக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.
அடுத்த வாரத்தில் எல் அண்ட் டி பிண்டெக், மைண்ட் ட்ரீ இணைப்பு?
மைண்ட் ட்ரீ நிறுவனத்தை எல் அண்ட் டி குழுமம் 2019-ம் தேதி வாங்கியது. எல் அண்ட் டி குழுமத்தில் எல் அண்ட் டி இன்ஃபோடெக் என்னும் டெக்னாலஜி நிறுவனமும் இருக்கிறது. இதுவரை இந்த இரு டெக்னாலஜி நிறுவனங்களும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்களை இணைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இதற்காக இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுகள் அடுத்த வாரம் கூடி முடிவெடுக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த இரு டெக்னாலஜி நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் இந்தியாவில் ஐந்தாவது பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு பிறகு மைண்ட்ட்ரீ என்னும் பிராண்ட் இருக்காது என்றே செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மே 6-ம் தேதி இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுகள் கூடி இதற்கான முடிவெடுக்கும். எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்தில் எல் அண்ட் டியின் பங்கு 74.05 சதவீதமாக இருக்கிறது. அதேபோல மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் எல். அண்ட் டியின் பங்கு 60.99 சதவீதமாக இருக்கிறது.
இந்த இணைப்பு நடந்து மூன்று ஆண்டுகளாக தனித்தனியாகவே இவை செயல்பட்டுவந்தன. அவ்வப்போது இணைப்பு குறித்த செய்திகள் வெளியானாலும் எதுவும் நடக்கவில்லை. ஆனால் தற்போது இணைப்புக்காக அடுத்தக்கட்ட வேலைகள் தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது. இரு நிறுவனங்களும் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. 20 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இரு நிறுவனங்களில் உள்ளனர். இரு நிறுவனங்களும் இணையும்போது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 80000க்கும் மேல் இருக்கும். ஆனால் இது குறித்து இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வாக கருத்து ஏதுவும் தெரிவிக்கவில்லை.