இ.எம்.ஐ செலுத்தவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சுமைதானா?: செக் வைத்த நிபந்தனை..!

இ.எம்.ஐ செலுத்தவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சுமைதானா?: செக் வைத்த நிபந்தனை..!
இ.எம்.ஐ செலுத்தவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சுமைதானா?: செக் வைத்த நிபந்தனை..!

கொரோனா வைரஸ் நெருக்கடியை மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கிய அறிவிப்பாக 3 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை கடனாளிகள் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன.

ரிசர்வ் வங்கி அறிவிப்பில், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட அனைத்துமே அடுத்த மூன்று மாதத்திற்கு கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை வசூலிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தது. அத்துடன் கடனாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரே மீண்டும் மாதத்தவணைகள் தொடங்கும் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தேசிய பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றாக தங்கள் அறிவிப்பை வெளியிட்டன. அதில் ரிசர்வ் வங்கி அறிவித்தபடி மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் தனியார் மற்றும் மாநில வங்கிகள் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. அதற்குள் சில தனியார் வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐ கட்டுவதற்கான குறுஞ்செய்திகள் சென்றுவிட்டன. இதனால் கடன் பெற்றவர்களின் குழப்பம் நீங்கவே இல்லை.

அதேசமயம் பொதுத்துறை வங்கிகள் உட்பட இ.எம்.ஐ வேண்டாம் என அறிவித்த வங்கிகள் அனைத்தும், விடுபட்ட மூன்று மாதங்களுக்கு வட்டி வசூலிக்குமா ? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சில தனியார் வங்கிகள் வெளியிட்ட அறிவிப்பில் மூன்று மாதத்திற்கு இ.எம்.ஐ இல்லை, ஆனால் வட்டி உண்டு என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் எப்போதும் போல இ.எம்.ஐ செலுத்தலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியபோது, “வங்கிகள் இ.எம்.ஐ-களை 3 மாதம் தள்ளுபடி செய்யவில்லை. 3 மாதங்களுக்கு ஒத்திவைத்திருக்கிறது அவ்வளவு தான். உதாரணத்திற்கு ஒரு நபர் 60 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்றால், அவர் இந்த மூன்று மாதம் செலுத்தாமல் விட்டுவிட்டு, கடைசி மாதம் முடிந்த பின்னரும் கூடுதலாக மூன்று மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும். அதுமட்டும் இன்றி அப்போது இந்த விடுபட்ட மூன்று மாதத்திற்கு சேர்த்து அவர்கள் வட்டியை செலுத்த நேரிடும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதை ஒரே தவணையில் செலுத்துவதாக இல்லை பிரித்து செலுத்தலாமா? என்பதை அவர்கள் கடன்பெற்ற வங்கிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நடைமுறை தனியார் வங்கிகள் மட்டுமின்றி தேசிய பொதுத்துறை வங்கிகளுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கி மாதத் தவணை வசூலிக்க வேண்டாம் என்று மட்டுமே கூறியிருக்கிறது. வட்டி வாங்க வேண்டாம் எனக் கூறவில்லை. எனவே அனைத்து வங்கிகளும் கட்டாயம் 3 மாதத்திற்கு வட்டியை கட்டச்சொல்வார்கள்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com