பிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்
இந்தியாவின் ஆன் லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்குகிறது. இதனை பிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாப்ட் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
ஆன்லைன் எனப்படும், இணையம் வாயிலாக பொருட்களை வாங்குவதும், விற்பதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்து, வீட்டுக்கே வந்து பொருட்களை வழங்கும் வர்த்தகம் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில், ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில், பிலிப்கார்ட், ஸ்னாப்டீல், குரோபர்ஸ் உட்பட பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவில் 10 ஆண்டுக்கு முன் கால் பதித்த போதும், அந்நிறுவனத்தால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவில், வால்மார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனம், இந்தியாவில், ஆன்லைன் வர்த்தகத்தில் சிறப்பான முறையில் கால் பதித்துள்ளது.
அதனால், இந்தியாவில் கால் பதிக்கும் முனைப்பில் பிளிப் கார்ட்டின் பெரும்பாலான பங்குகளை வாங்க வால்ட் மார்ட் திட்டமிட்டுள்ளது. இதனை பிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாப்ட் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து சாப்ட் வங்கி சிஇஓ கூறுகையில், “அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு பிளிப் கார்ட்டை விற்பதற்கான இறுதி ஒப்பந்தம் நேற்றிரவு கையெழுத்தானது” என்றார். பிளிப் கார்ட்டில் சாப்ட் வங்கிக்கு 20 சதவீதம் பங்குகள் உள்ளது. பிளிப் கார்ட்டில் 75 சதவீதம் பங்குகளை வால்ட் மார்ட் நிறுவனம் வாங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அமேசானுக்கு போட்டியாக பிளிப் கார்ட் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமோசன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இணைந்து 2007ம் ஆண்டு பிளிப் கார்ட் ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை இந்தியால் தொடங்கினர். அமேசான் போல் பிளிப் கார்ட்டும் தொடக்கத்தில் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாகவே இருந்தது. தற்போது பிளிப் கார்ட்டில் மொபைல் போன்கள், டிவிகள், ஷூ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.