ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் வோடாஃபோன் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் ஜியோவின் தாக்கம் ஆரம்பமான நாள் முதல் டெலிகாம் சந்தையில் உள்ள பிரபல மொபைல் நிறுவனங்கள் பல தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான பல மாற்றங்களை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது வோடாஃபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.348 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் பல மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன்படி ரூ. 348 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை அள்ளி வழங்க உள்ளது. 28 நாட்களுக்கு இயங்கும் இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்தத் திட்டம் ஏர்டெல்லின் 349 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மற்றும் ஜியோவின் 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்கு போட்டியாக களத்தில் இறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் வோடாஃபோனின் இந்த அதிரடியான ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத கேஷ் பேக் சலுகையும் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது. வோடாஃபோனின் இந்தப் புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடம் கவனத்தை பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.