திவாலாகும் அபாயத்தில் வோடஃபோன் - ஐடியா... 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலை இனி?

திவாலாகும் அபாயத்தில் வோடஃபோன் - ஐடியா... 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலை இனி?
திவாலாகும் அபாயத்தில் வோடஃபோன் - ஐடியா... 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலை இனி?

திணறவைக்கும் கடன் சுமையால் திண்டாடி வரும் வோடஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு 27 கோடி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர் என்பதும், அந்த நிறுவனம் திவாலானால் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் என்பதும் என்பதும் கவலையை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் - ஐடியா திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம், ரூ.1.8 லட்சம் கோடி கடன் என்பதும், தற்போது அதை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் நிலை. இந்த நிறுவனத்தில் 26 சதவிகிதம் உரிமையாளராக உள்ள குமார் மங்கலம் பிர்லா "எனது பங்குகளை நான் இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் வசம் கொடுத்து விடுகிறேன். அரசே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோலவே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் 45 சதவிகிதம் உரிமையை தன்வசம் வைத்திருக்கும் பிரிட்டன் நாட்டின் வோடஃபோன் நிறுவனம் தனது பங்குகளையும் இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறது.

கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இத்தகைய நிலைப்பாட்டை வோடஃபோன் நிறுவனம் எடுத்திருப்பதாக வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். வோடஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் தற்போது ரூ.350 கோடி ரொக்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், தற்போதைய நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் உரிமையாளரான குமாரமங்கலம் பிர்லா இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வோடஃபோன் - ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் ரொக்கம் செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23,000 கோடி கடனுக்கான வட்டியோ அல்லது அசலையோ திரும்ப செலுத்தவும் வழி தெரியாமல் அந்த நிறுவனம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரூ.25,000 கோடியை கடன் மூலமாக திரட்ட முயற்சி செய்து வருகிறது வோடஃபோன் - ஐடியா. ஆனால் இதுவரை அந்த தொகைக்கு ஏற்பாடு செய்ய உரிமையாளர்களால் இயலவில்லை என்பது கவலை அளிக்கக்கூடிய தகவலாக உள்ளது.

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகளும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவை சந்தித்து, தற்போது ஒரு பங்கு வெறும் ஆறு ரூபாய்க்கு விற்கபடும் அவல நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நிலையில், வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மேலும் கடன் வசதி அளிக்க இந்திய வங்கிகள் தயங்குகின்றன என்பதால், இந்த நிறுவனம் திவாலாகிவிடும் என கருதப்படுகிறது.

அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொடர்பாக டெலிகாம் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கிலே டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்துள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட ரூ.24,000 கோடியை மத்திய அரசுக்கு வோடஃபோன் - ஐடியா நிறுவனம் மட்டும் செலுத்த வேண்டும். ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அரசுக்கு கட்டணத்தை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளன என்றும், ஆனால் வோடஃபோன் - ஐடியா மிகவும் சிக்கலான இக்கட்டில் உள்ளது என்றும் டெலிகாம் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கடும் போட்டி காரணமாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் அரசு தரப்பில் பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் என டெலிகாம் துறை சுருங்கி வருகிறது என அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் இந்தியாவில் 14 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது பல நிறுவனங்கள் படிப்படியாக திவாலான நிலையில் தற்போது மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவும் கவிழும் சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஹட்ச், ஏர்செல், ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து வோடஃபோன் - ஐடியா உருவானது. டாடா, ரிலையன்ஸ் அனில் அம்பானி டெலிகாம் நிறுவனம் ஆகியவையும் இந்த நிறுவனத்தில் இணைய முயற்சி செய்து தோல்வியடைந்து, பின்னர் இந்தத் துறை விட்டு வெளியேறி உள்ளனர்.

வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தில் சேவையை இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களின் 23 சதவிகிதம் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வோடஃபோன் - ஐடியா திவாலானால், இவர்களுடைய தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்படும் என்பது கவலைக்குரிய நிலவரமாக உள்ளது. அரசு ஏற்கெனவே பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் டெலிகாம் நிறுவனத்தையே வெற்றிகரமாக நடத்த திணறும் நிலையில், வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தை தத்தெடுத்து காப்பாற்ற அரசு முயற்சி செய்யுமா என்பதே சந்தேகமாக உள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com