பழைய வாகனத்தை 'அழித்து' புதிது வாங்கினால் சலுகை: அரசு கொள்கையில் நிறுவனங்கள் அதிருப்தி

பழைய வாகனத்தை 'அழித்து' புதிது வாங்கினால் சலுகை: அரசு கொள்கையில் நிறுவனங்கள் அதிருப்தி
பழைய வாகனத்தை 'அழித்து' புதிது வாங்கினால் சலுகை: அரசு கொள்கையில் நிறுவனங்கள் அதிருப்தி

சமீபத்தில் பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான புதிய வாகனக் கொள்கை (Vehicle scrappage policy) மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கொள்கை மூலம் மிகவும் பழைய வாகனங்கள், சந்தையில் இருந்து அகற்றப்படும். அதனால், சுற்றுச்சுழல் மாசு குறையும். அதேசமயத்தில் பழைய வாகனங்கள் அகற்றப்படும்போது அதற்கு, ஒரு சான்றிதழ் வழங்கப்படும். புதிய வாகனம் வாங்கும்போது அந்தச் சான்றிதழை கொடுத்தால் 5 சதவீத தள்ளுபடியை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இந்த தள்ளுபடியுடன், சாலை வரியில் மாநில அரசுகள் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாகன நிறுவனங்கள் 5 சதவீத தள்ளுபடி வழங்குவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கம் இந்தப் புதிய விதியை கொண்டுவந்ததற்கு காரணம், பாதுகாப்பு இல்லாத வாகனங்களை சந்தையில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான். அதேபோல சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாகனங்களும் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்.

"ஒரு வாகனம் அழிக்கப்படுகிறது என்றால், அந்த வாகனம் ஃபிட்னெஸ் பெறவில்லை என்பதுதான் அர்த்தம். ஃபிட்னெஸ் இல்லாத வாகனத்தை அழிப்பது என்பது அவசியமானது. அந்த வாகனத்தை அழித்து, சம்பந்தப்பட்டவர் புதிய வாகனத்தை வாங்குவதற்கு உற்பத்தி நிறுவனங்கள் எதற்காக சலுகை வழங்க வேண்டும்?" என்று மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் அடிப்படையிலும் தகுதியில்லாத வாகனத்தை அழிப்பதற்கு நாங்கள் ஏன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்பது பார்கவாவின் கேள்வியாக இருக்கிறது.

அதேபோல, இந்தக் கொள்கையில் ஆட்டோமொபைல் துறைக்கு சாதகம் என்னும் வாதமும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், அதிலும் சில சிக்கல் இருக்கிறது. அமெரிக்காவில் இதேபோல ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஃபிட்னெஸ் இல்லாத வாகனங்களை அழித்தால், வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. மாறாக, தகுதியான வாகனங்களை அழித்து வாங்கப்படும் புதிய வாகனங்களுக்குத்தான் சலுகை வழங்கப்பட்டது. அதனால் தேவை உருவானது.

வெளிநாடுகளில் கொண்டுவரப்பட்டதுதான் தேவையை ஊக்குவிப்பதற்கான திட்டம். தற்போது இந்தியாவில் கொண்டுவரப்பட்டிருப்பது தகுதி இல்லாத வாகனங்களை சந்தையில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. தேவையை உருவாக்குவதும், தகுதி இல்லாத வாகனங்களை சந்தையில் இருந்து நீக்குவதும் ஒன்றல்ல என்றும் பார்கவா தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தக் கொள்கையால் புதிய வாகனங்களின் விற்பனை அதிகமாக உயராது என்றும் அவர் கூறுகிறார். அதாவது, பழைய வாகனங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூடுதலாக கணித்திருக்கிறது. அரசாங்கம் 4 வாகனங்கள் என கணித்தால், ஒரு பழைய வாகனம்தான் இருக்கிறது. அதனால், அழிக்கப்படும் வாகனங்கள் குறைவாகத்தான் இருக்கும். எனவே, ஆட்டோமொபைல் துறையின் வர்த்தகம் உயராது என்றும் இந்தத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

புதிய கொள்கையால் வாகன விற்பனை உயரும் என்னும் கருத்து இருந்தாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கணிப்பு வேறு மாதியாக இருக்கிறது. ஆனாலும், விரைவில் 1500 ஸ்கிராப்பிங் மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. அவற்றின் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாகனங்களை சந்தையில் இருந்து நீக்குவது, காப்பர் - அலுமினியம் உள்ளிட்ட உதிரி பாகனங்களை மறு சுழற்சி செய்வது முதலான சில நல்ல விஷயங்களும் நடக்கும்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com