பெட்ரோல் விலையில் ஒன்றிய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி
பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 8 மாவட்ட வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி தேசியக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசுக்கான வருவாய் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலியாக தொழில் நடத்துவதாக கணக்கு காட்டுபவர்களை கண்டறிந்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதே போல ஜி.எஸ்.டி யில் உள்ள குறைபாடுகளை களைந்து வணிகர்கள் முறையாக வரி செலுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
பத்திரப்பதிவு துறையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பதிவு செய்ய கூடாது. இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரம் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வணிக வரி துறை மற்றும் பதிவுத்துறையில் நிச்சயம் வரி வருவாய் அதிகரிக்கும்.
கடந்த பத்தாண்டு காலமாக வணிகர் நல வாரியம் அமைக்கப்படாமல் இருந்தது. தற்போது விரைவில் வணிகர் நல வாரியம் அமைக்கப்படும். தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அறிவித்ததை படிப்படியாக அமல்படுத்தி வருகிறார். பெட்ரோல்,டீசல் மீது அதிக வரியை ஒன்றிய அரசு வசூலிக்கிறது. அதை குறைக்க வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாக இருக்கிறது.
பத்திரப்பதிவு செய்ய டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்தில் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது. வணிகர் நலனுக்கு எதுவெல்லாம் நடைமுறை சாத்தியமோ, அதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். கடந்த காலத்தில் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மை. ஆனால் தற்போது அது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக வருவாய் வரம்பு இல்லை. சிறு வணிகர்களும் தங்களை நலவாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்