மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்... வருமான வரி விலக்கு உயருமா..?
அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார். இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா என்பதே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுதந்தர இந்தியாவில் முதலாவது முறையாக, மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. அதை பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதல்முறையாக மாற்றியுள்ளது.
மேலும், கடந்த 92 ஆண்டுகளாக தாக்கலாகி வந்த ரயில்வே பட்ஜெட்டும் இந்த முறை தனியாக தாக்கல் செய்யப்படாது என அரசு அறிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, நாளை தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் ஒரு பகுதியாக, ரயில்வேவுக்கான வரவு செலவுகளையும், புதிய அறிவிப்புகளையும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிடவுள்ளார்.
மத்திய பட்ஜெட் என்றாலே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா என்பதே இடம்பெறுவது வழக்கம். இப்போது ஆண்டுக்கு இரண்டரை லட்சமாக உள்ள வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, பட்ஜெட்டில் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சமாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், வரிவிலக்குக்கான 80சி பிரிவில் மொத்த வரிவிலக்கு ஒன்றரை லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயரும் என்றும், தேசிய ஒய்வூதிய திட்டத்துக்கான வரிவிலக்கு 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்மூலம், ஒன்றரை லட்ச ரூபாய் கூடுதல் வரிவிலக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.