லாக்டவுனால் மந்தநிலை: பட்ஜெட் 2021-ல் வருமான வரி சலுகைகள் கிடைக்குமா?
2021-22 நிதியாண்டுக்கு தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில் சலுகைகள் கிடைக்குமா என்பது பற்றி பார்க்கலாம்.
2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை வரும் பிப்ரவரி 1-ம் தேதியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை, வருவாய் இழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் நிலையில், அரசு நிறைய சலுகைகளை வழங்குமா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இருப்பினும் வருமானவரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுமா? என எதிர்நோக்கி உள்ளனர், மாதச் சம்பளம் பெறுவோர்.
தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவிகிதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவிகிதமும், 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவிகிதம் வருமான வரியும் விதிக்கப்படுகிறது. இவற்றில் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக, நடப்பு பட்ஜெட்டில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோரிடம் வருமான வரி வசூல் செய்யக் கூடாது, 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோரிடம் 10 சதவிகிதம் மட்டும் வருமான வரி வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சலுகைகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி பெறுவதில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இரண்டு முறைகளைப் பின்பற்றாமல் ஒரே முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரிச்சட்டப் பிரிவுகள் 80சியின் கீழ் வரி சேமிப்பு முதலீடுகளுக்கான வரம்பை 1.5 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கான விலக்கை 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவால் ஏற்படக்கூடிய மருத்துவமனை செலவுகளுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும், பல்வேறு தொழில்துறைகளில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக விதிமுறைகளை தளர்த்தி வரிச்சலுகைகளை வழங்க வேண்டும், கொரோனா பொதுமுடக்க காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிந்தவர்கள் பெற்ற படித்தொகைக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன போன்ற சலுகைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 7.5 சதவிகிதமாக வீழ்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பட்ஜெட்டில் வருமான வரி குறைக்கப்படுவது சாத்தியமில்லை என பல்வேறு தரப்பினரும் கூறினாலும், நிதியமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையில் சலுகைகள் கொடுக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.