பட்ஜெட் 2021 பார்வை: எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை... புரிதலுக்கு சில தகவல்கள்!

பட்ஜெட் 2021 பார்வை: எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை... புரிதலுக்கு சில தகவல்கள்!
பட்ஜெட் 2021 பார்வை: எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை... புரிதலுக்கு சில தகவல்கள்!

திட்டங்களுக்கான செலவுகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி இருந்தாலும், வங்கி மற்றும் நிதிசார்ந்த துறைகளில் செலுத்திய கவனம் காரணமாகவே பட்ஜெட்டின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 2,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தியது; இரு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் மற்றும் அடுத்த நிதி ஆண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஐபிஓ என நிதிசேவை துறையில் பல முக்கிய அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

வங்கிகள்:

இரு வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் அடுத்த நிதி ஆண்டில் நடக்கும். ஆனால், அது எந்த வங்கிகள் என்பதும் முற்றிலும் தனியார் மயமாகுமா அல்லது அரசின் பங்கு 51 சதவீதத்துக்கு கீழே செல்லுமா என்பது குறித்த தெளிவு இல்லை.

ஆனால், அதேசமயம் எஸ்பிஐ அல்லது பிஎன்பி ஆகிய பெரிய வங்கிகள் இந்த பட்டியலில் இருக்காது என்றே சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள். சிறிய வங்கிகளின் பங்குகளை விற்றாலே தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டி இருக்கும்.

அதேபோல நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில், ஒரு நிறுவனம் தனியார் மயமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்.ஐ.சி - ஐபிஓ

அடுத்த நிதி ஆண்டில் எல்.ஐ.சி. ஐபிஓ வெளியாகும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இதற்கான திட்டம் இருந்தது. சரியான சந்தை மதிப்பீட்டுக்காக காத்திருக்கிறோம், அடிப்படையில் பணிகளை தொடங்கிவிட்டோம் என சில வாரங்களுக்கு முன்பு எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்திருந்தார்.

எல்.ஐ.சி. பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறுவதால் வாடிக்கையாளர்கள் பதற்றப்பட ஏதும் தேவை இருக்காது. வழக்கம்போல பிரீமியம் செலுத்துவது மற்றும் க்ளைம் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. தற்போது 100 சதவீதம் மத்திய அரசு வசம் எல்.ஐ.சி. பங்குகள் உள்ளன. ஐபிஒவில் அரசாங்கத்தில் பங்குகள் சுமார் 10 அல்லது 15 சதவீதம் வரை மட்டும் விலக்கிகொள்ளப்படும் என தெரிகிறது. அதனால், பங்குச்சந்தையில் வர்த்தகமானாலும், அரசு வசம் பெரும்பான்மையாக பங்குகள் இருப்பதால் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலே இருக்கும். (நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் எல்.ஐ.சி. சட்டத்தில் திருத்தம் செய்யும்போதுதான் ஐபிஓ கொண்டுவர முடியும்).

எல்.ஐ.சி. தவிர வேறு பல நிறுவனங்களில் இருந்து அரசாங்கத்தின் பங்குகளை விலக்கிகொள்ளப்பட இருக்கின்றன. அடுத்த நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிபிசிஎல், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன், கண்டெயினர் கார்ப்பரேஷன், ஐடிபிஐ வங்கி, பிஇஎம்எல், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலக்கல் அடுத்த நிதி ஆண்டில் முடியும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com