அறிமுகம் செய்த ட்ரம்ப்.. அமெரிக்க சந்தையையும் உலகையும் ஆடவைத்த கிரிப்டோ மீம் நாணயம்!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரம்ப் கிரிப்டோ மீம் நாணயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் கிரிப்டோகரன்சி சந்தையில் புயல் வீசுகிறது.
உலகை உறைய வைத்த இந்த காட்சிகள்தான், தற்போது பெரும் புயலாக உருவெடுத்து கிரிப்டோ சந்தையை புரட்டிப் போட்டுள்ளது. இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று யோசிப்பதற்குள், டிரம்ப் செய்த அதிரடி செயலால் ஆடிப் போயிருப்பது அமெரிக்க சந்தைகள் மட்டுமல்ல, உலகமும்தான். ஆம், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அவர் கிரிப்டோ கரன்சியை வெளியிட்டார். அதற்கு டாலர் டிரம்ப் என்று பெயரிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை டிரம்பின் சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் மற்றும் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிமுகம் செய்தார். இந்த கிரிப்டோ காயின் அதன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சொத்து மதிப்பு மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிரிப்டோ டோக்கன் சுமார் இருபது டாலரிலிருந்து 70 டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி டிரம்ப் காயின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 14 பில்லியனுக்கும் அதிமான வர்த்தக அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சுமார் நூறு கோடி டிரம்ப் டாலர் டோக்கன்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சிகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த மீம் கிரிப்டோகரன்சி. இணையத்தில் டிரெண்டாகும் ஒரு மீமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதே மீம் கிரிப்டோகரன்சியாகும். டிரம்பின் இந்த டாலர் டிரம்ப் கிரிப்டோ என்பது, டிரம்பின் புகழ்பெற்ற தேர்தல் முழக்கமான ஃபைட், ஃபைட், ஃபைட் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. துப்பாக்கி குண்டுகள் அவரது காதை உரசிச் சென்றது. ரத்தம் வழியும்போது எழுந்த டிரம்ப் முதலில் உச்சரித்த வார்த்தைகள்தான் FIGHT... FIGHT... FIGHT... இதை முன்வைத்தே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தான் ஒரு பிசினஸ்மேன் என்பதை மீம் காயின் உருவாக்கியும் நிரூபித்திருக்கிறார்.
டொனால்டு ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள கிரிப்டோகரன்சியின் மதிப்பு வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 2 ஆயிரம் சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
டொனால்டு ட்ரம்ப் மீம் காயின் அறிமுகம் செய்யப்பட்ட மறுநாள், அவரின் மனைவி, மெலனியா ட்ரம்ப் மீம் காயினை அறிமுகப்படுத்தினார். அந்த காயின் வெளியான சில மணி நேரங்களிலேயே டிரம்ப் காயின் விலை சரியத் தொடங்கியது. முற்பகல் 11 மணி வாக்கில் மெலனியா ட்ரம்ப் மீம் காயின் ஒன்றின் விலை சுமார் 11 டாலரில் வர்த்தகமாகியது. மெலனியா ட்ரம்ப் மீம் காயினின் சந்தைமதிப்பு 1.81 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக COINMARKETCAP தரவுகள் கூறுகின்றன.
முன்னதாக, ட்ரம்ப் வெளியிட்ட டொனால்டு ட்ரம்ப் மீம் காயின் 70 டாலர் வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில், அவரின் மனைவி கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தியவுடனேயே ட்ரம்ப் மீம் காயின் சரியத் தொடங்கி தற்போது 58 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.