மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் என்ன?
Published on

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள்..

கொரோனா பெருந்தொற்று தமிழக பொருளாதாரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளதோடு, மாநிலத்தின் நிதி நிலையையும் சீர்குலைத்துள்ளது. கொரோனா காலத்தில் மிகக் கடுமையான முடிவுகளை மாநில அரசு எடுக்க வேண்டியிருந்ததாகவும், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக, நிதி சார்ந்த கடிதங்களை பிரதமருக்கு எழுதும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தொடர்பான நிதி அமைச்சர்களின் ஆலோசனையில் பங்கேற்ற தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுள்ளார்.

மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை கூடுதல் கடன் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை வரும் நிதியாண்டு முதல் 5 சதவீதம் வரை கூடுதல் கடன் பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது. இதன் மூலம் மூலதன செலவுகளை எதிர்கொள்வதோடு, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்கான செலவுகளை சமாளிக்கவும் முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டிக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை இந்த நிதி ஆண்டுடன் நிறைவடைகிறது. எனவே, இழப்பீடு அளிக்கும் நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு தமிழக அரசு கோரியுள்ளது.

15 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. 14 ஆவது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிதியில் இரண்டாயிரத்து 577 கோடியே 98 லட்சம் ரூபாய் தற்போது வரை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை. செயல்பாட்டின் அடிப்படையிலான மானியங்களும் தற்போது வரை தமிழக அரசுக்கு விடுவிக்கப்படவில்லை. இவற்றை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள நிலையில், நதிநீர்த் திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுத்தப்பட உள்ளது. நடந்தாய் வாழி காவேரி, கிருஷ்ணா நதி நீர் தேக்கத் திட்டம், வைகை - கோதையாறு கால்வாய் திட்டம் ஆகியவைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்கு சரிசமமாக இருக்கும் வகையிலான அறிவிப்பு, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, மத்திய அரசுக்கு 60 சதவீதம், மாநில அரசுக்கு 40 சதவீதம் என்ற நிதிப்பகிர்வுக்கான அறிவிப்பு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டுக்கான நிதியை 4 லட்சம் ரூபாயாக உயர்த்துவது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை பட்ஜெட்டில் தமிழக அரசு எதிர்பார்க்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com