பணம் பண்ண ப்ளான் B - 15: ஏன் நிதி ஆலோசகர்கள் தேவை?

பணம் பண்ண ப்ளான் B - 15: ஏன் நிதி ஆலோசகர்கள் தேவை?

பணம் பண்ண ப்ளான் B - 15: ஏன் நிதி ஆலோசகர்கள் தேவை?
Published on
குடும்ப டாக்டர் இருப்பதுபோல குடும்பத்துக்கு என நிதி ஆலோசகர் இருக்க வேண்டும். அப்போதுதான் நிதியை சரியாக கையாள முடியும்.
தற்போது வளர்ந்து வரும் துறைகள் என பட்டியலிட்டால் அதில் 'பைனான்சியல் டெக்னாலஜி' என்பது தவிர்க்க முடியாது. முதலீடு, பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்ட், கடன், காப்பீடு என அனைத்தையும் எளிதாக ஒரு க்ளிக்கில் செய்ய முடிகிறது. பைனான்ஸியல் டெக்னாலஜியில் பல செயலிகள் புதிய நிறுவனங்கள் வளர்ந்துவிட்டன. இதன் மூலம் முதலீடு அல்லது கடன் வாங்கும் செயல் எளிமையாகிவிட்டதே தவிர யாருக்கு எது தேவை, எது சரியானது என்னும் புரிதல் இல்லாமல் கிடைத்த நிதி திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள், கடன் கிடைத்தால் போதும் என கடன் வாங்குகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்வதற்கும் வாய்ப்பு குறைவு, கடன் வாங்குவதற்கும் வாய்ப்பு குறைவு என்பதால் நிதி ஆலோசகர்களை நாடுவதற்கு அவசியம் இல்லாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் சூழலில் பதிவு பெற்ற நிதி ஆலோசர்களை சந்தித்து உரையாடுவது அவசியமாகிறது. ஏன் தேவை என்பதை வேறு உதாரணத்துடன் விளக்கினால் எளிமையாக புரியும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கிறது என வைத்துக்கொள்வோம். எப்படி இருந்தாலும் டாக்டர் பாராசிட்டமால்தான் கொடுப்பார்; அதனால் நாமும் அதையே கொடுப்போம் என ரிஸ்க் எடுப்பதில்லை. டாக்டரிடம் சென்று அவர் பரிசோதனை செய்த பிறகு கொடுக்கும் மருந்தினை வாங்கிக்கொள்கிறோம். அப்போது நம்முடைய கவலை எல்லாம் எதனால் காய்ச்சல் வந்தது என்பது மட்டுமே. காய்ச்சல் என்பது அறிகுறி மட்டுமே, அதற்கு பல காரணங்கள் இருக்கும் என்பது நமக்கு தெரியும். தொண்டையில் அழற்சி, சளி, புட் பாய்சன் அல்லது வேறு எதாவது பிரச்னையா என்பது நமக்கு தெரியாது. அதனால் டாக்டரிடம் சென்று என்ன காரணத்துக்காக காய்ச்சல் என்பதை கண்டறிந்து மருந்து வாங்கிக் கொள்கிறோம்.
ஆனால் நிதி என்று வந்தவுடனே நமக்கு தெரிந்தது மற்றும் படித்ததை வைத்து முடிவெடுக்கிறோம். இது மிகவும் தவறானது. ஒரு முதலீட்டில் பல விஷயங்கள் உள்ளன. வரி சேமிப்பு அல்லது வருமானத்துக்கு கிடைக்கும் வரி, எவ்வளவு வருமானம், எப்போது முதிர்வடையும், அதில் உள்ள ரிஸ்க் என்ன என பல விஷயங்களை கவனிக்க வேண்டி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் உங்களுக்கு என்ன தேவை, ரிஸ்க் எடுக்கும் தன்மை என்ன என்பதை உங்களுக்கு தெரியாது. இந்த இரண்டிலும் தெளிவு இருந்தால் மட்டுமே சரியான முதலீட்டை தேர்ந்தெடுக்க முடியும்.
அதேபோல கடன் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்க முடியாது. உங்களுக்கு எவ்வளவு தேவை, அதற்கு உங்களிடம் என்ன இருக்கிறது. இருப்பதை வைத்துக்கொண்டு எங்கு கடன் வாங்குவது சரியானது என்பதையும் ஆலோசனை செய்துகொள்வது அவசியம். குடும்ப டாக்டர் இருப்பது போல குடும்பத்துக்கு என நிதி ஆலோசகர் இருக்க வேண்டும். அப்போதுதான் நிதியை சரியாக கையாள முடியும்.
நிதி ஆலோசர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. அவர்களுக்கு எந்த திட்டம் அதிக நன்மை அளிக்கிறதோ அந்த திட்டத்தை மட்டும் பரிந்துரை செய்கிறார்கள் என தோன்றலாம். சமீபத்தில் ஆலோசர்கள் மற்றும் டிஸ்ரிபியூட்டர்களுக்கு என பிரத்யேக விதிமுறைகளை செபி உருவாக்கி இருக்கிறது. நீங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனையை மட்டும் பெற்றுக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளும் வசதி தற்போது இருக்கிறது.
அனைத்து விதமான நிதி சார்ந்த திட்டங்களிலும் நமக்கு புலமை கிடையாது. நமக்கு என்ன தேவை என்பது தெரியாது. நம்முடைய போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து சீராய்வு செய்வதற்கு ஆலோசர்கள் தேவை. முதலீடு என்பது ஒரே விஷயத்தில் செய்வதல்ல. பல விதமான சொத்துகளிலும் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற காம்போவை உருவாக நிதி ஆலோசகர்கள் தேவை. டாக்டருக்கு ஆலோசனைக் கட்டணம் கொடுப்பதற்கு நாம் யோசிப்பதில்லை. ஆனால் நிதி ஆலோசகரின் ஆலோசனைக்கு கட்டணம் தர மறுக்கிறோம். காரணம் நிதி பற்றிய முழுமையான அறிவு இருக்கும் என நம்புகிறோம். 'மனிதன்' படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லும் வசனத்துடன் முடிக்கிறேன். உங்களுக்கு தெரியாத விஷயத்தில் உங்களுடைய அறிவை பயன்படுத்தாதீர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com