டிபிஎஸ் - லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு: வாடிக்கையாளர்கள், பங்குதார்கள்... யாருக்கு பாதிப்பு?

டிபிஎஸ் - லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு: வாடிக்கையாளர்கள், பங்குதார்கள்... யாருக்கு பாதிப்பு?
டிபிஎஸ் - லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பு: வாடிக்கையாளர்கள், பங்குதார்கள்... யாருக்கு பாதிப்பு?

50,000 ரூபாய் (இரு வாரங்களுக்கு) மட்டுமே யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி விதிமுறையை வகுத்தது. (பிஎம்சி வங்கி மீதும் இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது) சில மணி நேரங்களுக்கு முன்பு இதேபோன்ற விதிமுறையை லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய அரசு விதித்திருக்கிறது. டிசம்பர் 16-ம் தேதி வரை 25,000 ரூபாய்க்கு பணம் எடுக்க முடியாது என அரசு தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும், மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக அனுமதி பெற்று கூடுதல் தொகையை எடுக்க முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாராக்கடன் அதிகம்

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 396 கோடி அளவுக்கு நஷ்டத்தை இந்த வங்கி சந்தித்தது. அதற்கு முன்பான பத்து காலாண்டுகளிலும் இந்த வங்கி நஷ்டத்தையே சந்தித்திருக்கிறது. கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் ரூ.2,310 கோடி அளவுக்கு இந்த வங்கி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

செப்டம்பர் காலாண்டு முடிவின் படி 24.45 சதவீதம் அளவுக்கு வங்கியின் மொத்த வாராக்கடன் இருக்கிறது. அதாவது வங்கி மூலம் வழங்கப்பட்ட ரூ.100 கடனில் 24.45 ரூபாய் சிக்கலில் இருக்கிறது. நிதி நிலைமை மோசமாக இருக்கும் காரணத்தால் வங்கியின் டெபாசிட்தாரர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த உத்தரவால் டெபாசிட்தாரர்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ரெலிகர், காக்ஸ் அண்ட் கிங்ஸ், ஜெட் ஏர்வேஸ், ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் வாராக்கடனாக மாறி இருப்பதாகவும், மொத்த வாராக்கடனில் இது கணிசமான அளவு இருக்கும் என்றும் வங்கியின் முன்னாள் பணியாளர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதனால் இரு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் குழு மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் மறு நியமனத்தை பங்குதாரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதனால் இயக்குநர்கள் கமிட்டி என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வங்கி செயல்பட்டுவருகிறது.

டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பு

கடந்த ஆண்டு இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை வாங்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு க்ளிக்ஸ் கேபிடல் என்னும் நிறுவனம் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தது. ஆனால் அந்த முயற்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

இந்த நிலையில், டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. (இண்டோஸ்டார் நிறுவனமும் எல்விபியை வாங்குவதற்கான முயற்சியில் இருந்தது கவனிக்கத்தக்கது). ஒழுங்குமுறை ஆணையமான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய ரூ.2,500 கோடி முதலீடு தேவை. இந்த தொகையை டிபிஎஸ் முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் (prompt corrective action) லக்‌ஷ்மி விலாஸ் வங்கி செயல்பட்டுவந்தது. அதாவது ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் முக்கியமான நடவடிக்கைகளை லக்‌ஷ்மி விலாஸ் வங்கி எடுக்க முடியாது.

யாருக்கு பாதிப்பு?

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்காக நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது. இது தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மீது வரும் 20-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கபட்டிருப்பதால் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கோ அல்லது டெபாசிட்களுக்கோ எந்தவிதமான பிரச்னையும் இல்லை. ஆனால், லக்‌ஷ்மி விலாஸ் பங்குதாரர்களுக்கு எந்த பயனும் இல்லை, பயன் இல்லை என்பதை விட நஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

நவம்பர் 17-ம் தேதி மாலை வர்த்தகம் முடிவில் 15.60 ரூபாய் அளவில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்திருக்கிறது. ஆனால், டிபிஎஸ் வங்கி வாங்கிய பிறகு இந்த பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்விபியின் நெட்வொர்த் எதிர்மறையாக சென்றிருப்பதால், டெபாசிட்தாரர்களை மட்டும் பாதுகாக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. இந்த பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதால் பல சிறுமுதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தவிர நிறுவன முதலீட்டாளர்களும் இந்த வங்கியில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கையில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் இறங்கியது. அதனால் அந்த நிறுவனம் வசம் 4.99 சதவீத பங்குகள் இருக்கின்றன. எஸ்ஆர்இஐ இன்ஃபிரா குழுமம் வசம் 3.34 சதவீத பங்குகளும், கேப்ரி குழுமம் வசம் 3.82 சதவீத பங்குகளும் உள்ளன.

எல்ஐசி, ஆதித்யா பிர்லா சன்லைப் இன்ஷூரன்ஸ் மற்றும் பிரமெரிக்கா லைப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 1.60%, 1.83% மற்றும் 2.73 சதவீத பங்குகளை வைத்துள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 187 ரூபாயில் வர்த்தகமான பங்கு தற்போது மதிப்பில்லாமல் போய்விட்டது. தற்போதைய வரைவு அறிக்கையை அப்படியே செயல்படுத்தும் பட்சத்தில் லக்‌ஷ்மி விலாஸ் பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போகலாம்.

தற்போதைய இயக்குநர்களை முழுவதும் நீக்கிவிட்டு, இந்த இணைப்பு முடியும் வரை நிர்வாகியாக டிஎன் மனோகரனை (கனரா வங்கியின் முன்னாள் தலைவர்) ரிசர்வ் வங்கி நியமனம் செய்திருக்கிறது.

டிபிஎஸ் வங்கி ரூ.2500 கோடியை முதலீடு செய்வதால் டெபாசிட்தார்கள் பயப்பட ஒன்றும் இல்லை. 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது ஒரு தற்காலிக அசௌகர்யமே. ஆனால், பங்குதார்களுக்கு இது நிச்சயம் பெரும் இழப்பு. பங்குகளில் முதலீடு செய்வதால் பெரும் தொகையை சம்பாதிக்க வாய்ப்பு இருப்பது போல, பெரும் தொகையை இழக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை சிறு முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com