'2023ல் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும்' : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்
2023ல் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும் என்றும் பெருநிறுவனங்கள் வருகைக்கேற்ப தொழில்நுட்ப மேம்பாடு அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவை சந்தித்தது. ஜியோவின் அதிரடி ஆஃபர்களால் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் திரும்பினர். இந்த சூழலில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கியது. அதிலும் மற்ற முன்ணனி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அடுத்தக்கட்டமாக டிஜிட்டல் வணிகத்தில் களம் கண்டுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் வருகையால், 2023ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. சில்லறை வணிகத்தில் சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் நிறுவனங்களின் வருகையால், கடந்த சில ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் டிஜிட்டல் மயமானதாக பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. 70 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய சில்லறை வணிகத்தில் 90 சதவிகிதம் அமைப்புசாரா சிறுகடைகள் என்ற நிலையில், அவற்றில் பெரும்பாலானவை தொழில்நுட்ப முன்னேற்றம் அடைய ஆர்வம் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.