
இத்தாலியில் விற்கப்படும் ஒரு பீசாவின் விலை ரூ. 77 லட்சம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
இத்தாலி நகரத்தில் பிரபலமான சமையல் கலைஞர்கள் இணைந்து உலகிலேயே அதிக விலையுள்ள பீசா ஒன்றை தயாரித்துள்ளனர். ‘லூயிஸ் 13' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பீசாவின் விலை ரூ. 77 லட்சம். இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு தயாரிக்கப்படும் இந்த பீசாவை வாங்கி உண்பவருக்கு இதனுடன், விலையுர்ந்த மதுபானமான ரெமி மார்ட்டின் பரிமாறப்படுகிறது. இந்த பீசா சுமார் 72 மணி நேரம் வைத்து பதப்படுத்தப்படும் என அதை தயாரிக்கும் சமையல் குழுவில் உள்ள சமையல் நிபுணர் ரெனோடோ வயோலா தெரிவித்துள்ளார். அதே போல் இந்த பீசாவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனை மற்றும் உணவு பொருட்கள் பிரான்சில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தனியார் உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகிலேயே அதிக விலையுள்ள உணவுகள் பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ’லூயிஸ் 13' பீசா உலகிலேயே விலையுர்ந்த பீசா என்ற பெருமையை பெற்றுள்ளது.