நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், மற்றொறு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினார் இந்தியாவை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்திற்கு பிறகு, டெலினாரிடம் உள்ள ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம் (கிழக்கு மற்றும் மேற்கு), மகாராஷ்டிரா ஆகிய 7 தொலைத்தொடர்பு வட்டங்கள் ஏர்டெல் வசம் வந்துவிடும். இதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆனால் பார்தி ஏர்டெல் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், எவ்வளவுக்கு டெலினார் நிறுவனத்தை வாங்க இருக்கிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இந்த தகவல் வெளியான பின் பங்குச் சந்தைகளில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது.
கடந்த வருட இறுதியில் ரிலையன்ஸ்-ன் ஜியோ சேவை தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்தது. இலவச கால், மெசேஜ் மற்றும் டேட்டா வசதிகளை ஜியோ அளித்தது. ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்த காலத்தில் 10 கோடி பேராக உயர்ந்தனர். இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களுக்கு பெரும் லாப குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை கையகப்படுத்தவும் மற்ற நிறுவங்களோடு இணையவும் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த மாதம், இரண்டு பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின என்பது குறிப்பிடதக்கது.