இணைய சமநிலை தொடர்பான புதிய பரிந்துரைகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.
இணைய சேவைகளை வழங்கும்போது ஒரு சில இணையதளங்கள் மட்டும் விரைவாக செயல்படும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது என டிராய் பரிந்துரைத்துள்ளது.
இணையவழி ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒப்பந்தங்களை நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையசேவை வழங்குவோர் , இணையதளங்களை நடத்துவோர், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து விதிமீறல்களை கண்காணிக்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இணையவழி ஏற்றத்தாழ்வுகள் என்பது இணையதளத்தை தடுப்பது, வேகத்தை கட்டுப்படுத்துவது, சில இணையதளங்களை மட்டுமே அதிவேகமக செயல்பட அனுமதிப்பது போன்றவற்றை குறிக்கும்.