சுவிஸ் வங்கிகளில் குறைந்தது இந்தியர்கள் டெபாசிட்?
மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளை தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யும் வங்கிகளில் உலக அளவில் புகழ்பெற்றது சுவிஸ் வங்கிகளாகும். இங்கு பதுக்கப்படும் பணம் குறித்து வங்கி நிர்வாகங்கள் ரகசியம் காப்பதால், உலகளவில் ஏராளமான அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் இதில் பல ஆயிரம் கோடிகளை டெபாசிட் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையால் இந்த வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்த பணத்தின் அளவு கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில், சுவிஸ்
வங்கியில் இருந்த இந்தியர்கள் பணம் ரூ.23 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியர்கள் பணம் வெறும் ரூ.4 ஆயிரத்து 500
கோடியாக குறைந்துள்ளது. சுவிஸ் தேசிய வங்கி இந்த புள்ளி விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இத்தகைய புள்ளி
விவரத்தை அவ்வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, 30 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான் இந்தியர்கள் டெபாசிட் பெருமளவு குறைந்துள்ளதாகவும் வங்கி நிர்வாகம்
தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கருப்பு பண மீட்பு நடவடிக்கையால் இந்திய வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வேறு சர்வதேச வங்கியில் டெபாசிட் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.