தபால் நிலையங்களில் நாளை வரை தங்கப் பத்திரம் விற்பனை
தபால் நிலையங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய தங்கப் பத்திர விற்பனை நாளை (ஆகஸ்ட் 13) வரை நடக்கிறது.
'மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790 ஆகும். சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராய நகர் தலைமை தபால் நிலையத்திலும், மயிலை தலைமை தபால் நிலையத்திலும், 22 துணைத் தபால் நிலையங்களிலும் தங்கப் பத்திர விற்பனை நடைபெறுகிறது.
தங்கப் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். ஒருவர் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டாளர் கணக்கில் செலுத்தப்படும். 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பம் உடையவருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயமாகும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்டு ஆகியவற்றில் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்கப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்' என்று சென்னை மத்தியக் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.