WWW-ன் சோர்ஸ் கோடு ரூ.40 கோடிக்கு ஏலம்: இணையத்தில் பரபரக்கும் 'என்.எஃப்.டி' என்றால் என்ன?

WWW-ன் சோர்ஸ் கோடு ரூ.40 கோடிக்கு ஏலம்: இணையத்தில் பரபரக்கும் 'என்.எஃப்.டி' என்றால் என்ன?
WWW-ன் சோர்ஸ் கோடு ரூ.40 கோடிக்கு ஏலம்: இணையத்தில் பரபரக்கும் 'என்.எஃப்.டி' என்றால் என்ன?

இணையத்தின் புதிய ட்ரெண்டாக கருதப்படும் என்.எஃப்.டி முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்கும் வகையில் 'டிம் பெர்னர்ஸ் லீ' (Tim Berners-Lee) உருவாக்கிய வலையின் மூல நிரல் (World Wide Web source code) 5.4 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 40 கோடி. புகழ்பெற்ற ஏல நிறுவனம் சத்பீஸ் (Sotheby's) ஒரு வார காலமாக நடத்திய ஏலத்தின் முடிவில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், வலை மூல நிரலின் என்.எஃப்.டி-யை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதனால் வலைக்கு - இணையத்திற்கு என்னாகும் என்றெல்லாம் கவலை கொள்ளவேண்டாம். ஆனால், நிச்சயம் என்.எஃப்.டி ஆர்வலர்களுக்கு இது உற்சாகம் தரும் செய்திதான். 'டிம் பெர்னர்ஸ் லீயே என்.எப்.டி. பக்கம் வந்துவிட்டார், இனி இதற்கு ஆதரவு பெருகும்' என அவர்கள் துள்ளி குதிக்கலாம். அதே நேரத்தில், 'லீ இப்படி செய்ய வேண்டுமா?' என லேசாக முணுமுணுப்பவர்களும் இல்லாமல் இல்லை.

என்.எஃப்.டி (NFT) என்றால் என்ன? - இந்த விஷயம் தொடர்பாக மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் முதலில் என்.எஃப்.டி என்றால் என்ன என சுருக்கமாக புரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் 'நான் ஃபங்கியபில் டோக்கன்ஸ்' (non-fungible token) என்பதைத்தான் சுருக்கமாக 'என்.எஃப்.டி' என்று சொல்கின்றனர். அதாவது, 'மாற்றப்பட முடியாத டோக்கன்' என்று பொருள். தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் டோக்கன் என்றும் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, இணைய பணமான பிட்காயின் போன்ற இன்னொரு வடிவம் என்று சொல்லலாம். உருவம் இல்லா அருவ பணமான பிட்காயினும் அடிப்படையில் டிஜிட்டல் டோக்கன்தான். ஆனால், டீ டோக்கன், காபி டோக்கன் போல வாங்க கூடியது அல்ல; இந்த டிஜிட்டல் டோக்கனை மைனிங் முறையில் டிஜிட்டல் வடிவில் உருவாக்க வேண்டும். அதோடு, இந்த டிஜிட்டல் டோக்கனை பிரதியெடுக்க அல்லது போலி செய்யவெல்லாம் முடியாது. ஏனெனில், இவை முழுவதும் குறியீடுகளால் (code) ஆனது.

இவை எல்லாம் பிட்காயின் போன்ற கிர்ப்டோ கரன்சிகளின் தனித்தன்மை. எப்படி பிட்காயின் என்பது டிஜிட்டல் குறியீடாக இருக்கிறதோ அதுபோலவே, டிஜிட்டல் சொத்துக்களுக்கான சான்றிதழ்களையும் டிஜிட்டல் டோக்கனாக உருவாக்கலாம். அதைத்தான் என்.எப்.டி என்கின்றனர்.

பிட்காயின் Vs என்.எஃப்.டி: பிட்காயின் போலவே, இந்த டோக்கன்களையும், பிளாக்செயினில்தான் உருவாக்கி சேமித்து வைக்க வேண்டும். பிட்காயின் போன்றது என்றாலும், என்.எஃப்.டிக்கும் பிட்காயினுக்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. பிட்காயின் போல இது பரிவர்த்தனைக்கு உரியது அல்ல - அதாவது மாற்றத்தக்கது அல்ல.

ஆம், பிட்காயின் அதன் செயல்பாட்டில் பாரம்பரிய பணத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அடிப்படையில் பிட்காயின் பரிவர்த்தனைக்கு உரியதுதான். அதாவது ஒரு பிட்காயினுக்கு இன்னொரு பிட்காயின் நிகரானது. இரண்டுக்கும் ஒரே மதிப்புதான். ஆனால், என்.எஃப்.டி. விஷயத்தில் இந்த பரிவர்த்தனை செல்லுபடியாகாது. ஒரு என்.எப்.டி., வேறு எதற்கும் நிகரானது அல்ல. அது இன்னொரு என்.எஃப்.டியுடன் மாற்றத்தக்கதல்ல. ஏனெனில், அதன் குறியீடு அதற்கு மட்டுமே உரியது. இப்படி பரிவர்த்தனை செய்ய முடியாத தன்மையை குறிக்கும் வகையில்தான், இந்த டிஜிட்டல் டோக்கன்களை பொருளாதார மொழியில் 'நான் ஃபங்கியபில்' (மாற்றத்தக்கதல்ல) என சொல்கின்றனர்.

இப்போது இதன் முக்கியத்துவமும் புரிந்திருக்குமே. ஆம், மாற்ற முடியாத டோக்கன் என்பதால், இதை எந்த ஒரு அரிய படைப்புடனும் இணைக்க முடியும். அதாவது, அதற்கான மூல சான்றிதழாக வழங்கலாம்.

உதாரணத்திற்கு ஒரு டிஜிட்டல் ஓவியத்திற்கு என்.எஃப்.டியை உருவாக்கினால், அது அந்த ஓவியத்திற்கான டிஜிட்டல் சான்றிதழாக இருக்கும். போலி செய்ய முடியாத சான்றிதழ்.

மூல படைப்புகளை விலை கொடுத்து வாங்குவதன் காரணமே அவை அரிதானது என்பதுதானே. மூலம் ஒன்றுதான். மற்றவை எல்லாம் நகல் என்பதுதான் மூலத்திற்கு மதிப்பு. ஆனால், டிஜிட்டல் உலகில், எந்த பொருளையும் எளிதாக நகலெடுத்து விடலாம் என்பதால், அவற்றின் டிஜிட்டல் உரிமையை விற்பது அல்லது பராமரிப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது.

இதற்கு தீர்வாகத்தான், டிஜட்டல் சொத்துகளுக்கு உரிமை அளிக்கும் வகையில் பிளாக்செயினில் என்.எஃப்.டி வடிவில் டிஜிட்டல் டோக்கன்களை உருவாக்கி விற்கின்றனர். இவை தனித்தன்மை வாய்ந்தது என்பதால், விலை மதிப்பில்லாதவையாகவும் கருதப்படுகின்றன. எனவே முதலீடு நோக்கிலும் கவர்கின்றன.

எந்த ஒரு டிஜிட்டல் பொருளுக்கும் என்.எஃப்.டி உருவாக்கலாம். அது அதன் உரிமை மீதான சான்றிதழாக அமையுமே தவிர, அதன் காப்புரிமையாக அமையாது. என்.எஃப்.டி உரிமையை விற்ற பிறகும் அந்த படைப்பின் காப்புரிமை உரியவரிடமே இருக்கலாம். என்.எஃப்.டி., எதற்காக என்றால் இந்த படைப்பின் ஒரே உரிமையால் இன்னார் என அடையாளம் காட்டுவதுதான்.

2011-ம் ஆண்டு முதல் என்.எஃப்.டி பயன்பாட்டில் இருந்தாலும் அண்மைக்காலமாகதான் இதன் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன், 'பீப்பில்' எனும் டிஜிட்டல் ஓவியம், என்.எஃப்.டியாக எக்கச்சக்கமான விலைக்கு விற்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டோர்சியின் முதல் ட்வீட் என்.எஃப்.டியும் அதிகம் விலைக்கு விற்கப்பட்டது. புகழ் பெற்ற மீம்கள் சிலவற்றின் மூல வடிவமும் என்.எஃப்.டியாக விற்கப்பட்டன.

இந்த வரிசையில்தான், இணையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த வைய விரிவு வலையை (World Wide Web) உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ, வலை உருவாக்கத்திற்காக எழுதிய மூல குறியீடு என்.எஃப்.டியாக ஏலம் விடப்பட்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இணையம் Vs வலை: வலையை பெரும்பாலும் நாம் இணையம் என்றே குறிப்பிட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல். அந்த வலைப்பின்னலின் மீது உருவாக்கப்பட்ட ஒரு பிரதான செயலி வைய விரிவு வலை. சுருக்கமாக வெப் அல்லது வலை.

இணையம் 1969-ல் இருந்து இருக்கிறது என்றாலும், 1990கள் வரை அது ஆய்வாளர்கள், கல்வியாளர்களால் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த கால கட்டத்தில் பொதுமக்களில் இணையத்தை அறிந்தவர்களும் பயன்படுத்தியவர்களும் சொற்பமே.

இணையத்தில் தகவல்களை எளிதாக பகிரும் வகையில், ஹைபர்டெக்ஸ்ட் இணைப்பு கொண்ட வலையை உருவாக்கலாம் என டிம் பெர்னர்ஸ் லீ 1989-ல் சமர்பித்த திட்டமே, வலையாக உருவாகி எல்லோரும் இணையத்தை அணுக வைத்தது. உலகின் முதல் வலைப்பக்கம், முதல் பிரவுசர் எல்லாவற்றையும் லீ தான் உருவாக்கினார்.

வலை அறிமுகமான பிறகே இணையம் வளர்ச்சி கண்டு வையம் முழுவதும் பரவியது. இதற்கு ஆதாரமாக அமைந்த குறியீடுகளை தான் லீ என்.எஃப்.டி வடிவில் ஏலம் விட சம்மதித்தார். இந்த என்.எஃப்.டி நான்கு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. வலையின் மூல நிரல் அல்லது குறியீடு, அதன் உருவாக்கம் பற்றிய அனுமேஷன் வீடியோ, லீ கையெழுத்திட்ட டிஜிட்டல் போஸ்டர் மற்றும் அவர் எழுதிய கடிதம் ஆகியவை உள்ளன.

வலையை உருவாக்கிய லீ, அதன் மீது காப்புரிமை கொள்ளாமல், பொதுவெளியில் வைத்தார். இதுவே வலையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமானது. வலை கண்டுபிடிப்பின் மூலம் கோடிகளை சம்பாதிக்க நினைக்காத லீ, இப்போது அதன் மூல நிரலை என்.எஃப்.டி வடிவில் ஏலம் மூலம் விற்பனை செய்தது ஏன் என கேள்வி எழுவது இயல்பானதுதான்.

இதற்கு லீயே அழகாக பதில் அளித்திருக்கிறார். 'இப்போதும் நான் வலையை விற்பனை செய்யவில்லை' என அவர் கூறியிருக்கிறார். 'இந்த ஏலம் காரணமாக யாரும் வலையின் காப்புரிமைக்கு பணம் கோர முடியாது என்று கூறியுள்ளனர், இது கையெழுத்திட்ட படத்தை விற்பது போன்றது' என தெரிவித்துள்ளார்.

ஒருவிதத்தில் என்.எஃப்.டி என்பது வலையை போன்றதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். என்.எப்.டிக்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம் இது.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com