வர்த்தக நிலவரம் : சென்செக்ஸ் உயர்வு, நிஃப்டி சரிவு
இந்திய பங்குச் சந்தையின் இன்றை நிலவரம் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 11 புள்ளிகள் வீழ்ந்தும் முடிவடைந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை நிலவரம் இன்று காலை முதல் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. அந்நிய முதலீடுகளின் அதிகரிப்பால், தொடக்கம் முதலே இந்த உயர்வு நிலவியது. இதனால் 30 பங்குகளில் வர்த்தகம் 80.70 புள்ளிகள் வரை உயர்ந்தது. இது 0.21 சதவிகதம் ஏற்றம் ஆகும். அதன்படி, இன்றைய நிலையில் மும்பை பங்குச் சந்தை மதிப்பான சென்செக்ஸ் அதிகபட்சமாக 38,444.17 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் இன்றைய தின முடிவில் அது வீழ்ச்சியடைந்து, 23.28 புள்ளிகள் உயர்வுடன் 38,386.75 புள்ளிகளுடன் முடிவடைந்தது. கடந்த 7 அமர்வுகளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்திய பங்குச் சந்தை மதிப்பான நிஃப்டி 11.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 11,521.05 புள்ளிகளில் முடிவடைந்தது. இருப்பினும், இன்ஃபேசிஸ், வேதாந்தா, ஹெச்.சி.எல், எல் அண்டு டி, சன் பார்மா, ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குகள் ஏற்றமடைந்தன. எண்ணெய் மற்றும் கேஸ், வங்கிகள், வாகனங்கள் தொடர்பான பங்குகள் சற்று சரிவை சந்தித்தன. தற்போதை நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீடுகள் ரூ.2,132.36 கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ளன. ஆனால் தேசிய நிறுவன முதலீடுகள் ரூ.1,253.67 கோடிகள் மதிப்பிற்கு விற்பனையடைந்துள்ளன.