\
SEBI
SEBIREUTERS

அந்நிய முதலீட்டாளர் சேர்க்கை 5 நாட்களாக குறைக்க திட்டம்!

பங்குச் சந்தை விதிமுறைகளை எளிமைப்படுத்தும் செபியின் புதிய முயற்சிகள்
Published on: 
Summary

இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் சேர்க்கை நடைமுறையை ஐந்து வேலை நாட்களுக்குள் முடிக்க செபி திட்டமிட்டுள்ளது. மேலும், ரீட்ஸ் மற்றும் இன்விட்ஸ் யூனிட்களின் பட்டியலிடும் காலத்தை ஆறு நாட்களில் இருந்து மூன்று நாட்களாக குறைக்கவும் ஆலோசனை.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், முதலீட்டாளர்கள் சந்தையை எளிதில் அணுகும் வகையிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அந்நிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களான எப்.பி.ஐ.,க்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பதிவு மற்றும் சேர்க்கை நடைமுறையை ஐந்து வேலை நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளான ரீட்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளான இன்விட்ஸ் ஆகியவற்றின் யூனிட்கள் சந்தையில் பட்டியலிடப்படும் காலத்தை, ஆறு நாட்களில் இருந்து மூன்று நாட்களாக குறைக்கவும் செபி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே, நவம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, அமைப்பின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார்.

THUHIN KANTHA PANDEY
THUHIN KANTHA PANDEYANI

பட்டியலிடும் விதிகளில் மாற்றம்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் மற்றும் தகவல் வெளியீட்டு விதிமுறைகளைக் கொண்ட எல்.ஓ.டி.ஆர்., கட்டமைப்பை செபி மறுஆய்வு செய்து வருகிறது.

அதேபோல, நிறுவனங்கள் பங்குகளை வெளியிடுவது தொடர்பான ஐ.சி.டி.ஆர்., விதிமுறைகளும், சிறு, குறு நிறுவனங்களுக்கான எஸ்.எம்.இ., ஐ.பி.ஓ., விதிமுறைகளும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

அன்னிய முதலீட்டாளர்களுக்கு எளிய நடைமுறை

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், அவர்களுக்கான சேர்க்கை காலத்தை ஐந்து வேலை நாட்களாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த இடர்பாடு கொண்ட அன்னிய முதலீட்டாளர்களுக்கான இணக்க நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்வாகத்' கட்டமைப்பின் கீழ், இதுவரை 740 எப்.பி.ஐ.,க்கள் பதிவு செய்துள்ளதாக செபி தலைவர் தெரிவித்தார்.

பங்கு தரகர்களுக்கு அடுக்குமுறை விதிகள்

பங்கு தரகு நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய இணக்க நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் இடர்பாடுகளுக்கு ஏற்ப அடுக்குமுறை இணக்க விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து செபி ஆராய்ந்து வருகிறது.

டீமேட் 2.0 இரண்டாம் கட்டம்

டீமேட் 2.0 திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று பாண்டே தெரிவித்தார்.

கடன் பத்திரச் சந்தையை மேம்படுத்த திட்டம்

நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரச் சந்தையில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே தொடர்ந்து வர்த்தகம் நடைபெறுவதை ஊக்குவிக்கும் சந்தை உருவாக்கும் கட்டமைப்பை (Market Making Framework) ஏற்படுத்த செபி பணியாற்றி வருகிறது.

இதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், கடன் பத்திரச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, குறியீட்டு அடிப்படையிலான பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் உதவும் என்றும் செபி தலைவர் தெரிவித்தார்.

share market
share marketreuters

பங்குச் சந்தையில் உள்நாட்டு ஏ.ஐ., கட்டமைப்பு

பங்குச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக, உள்நாட்டு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஏ.ஐ., கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் செபி ஆராய்ந்து வருகிறது.

இடர்பாடுகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறை

செபியின் ஒழுங்குமுறை அணுகுமுறை குறித்து விளக்கிய பாண்டே, இடர்பாடுகள் குறைவாக உள்ள துறைகளில் விதிமுறைகளை எளிமைப்படுத்தியும், இடர்பாடுகள் அதிகரிக்கும் பகுதிகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதாக தெரிவித்தார்.

இதற்கு உதாரணமாக, குறைந்த இடர்பாடு கொண்ட அன்னிய முதலீட்டாளர்களுக்கான இணக்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், பங்குகள் சார்ந்த டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் இடர்பாடுகள் அதிகரித்தபோது, அவற்றைக் கட்டுப்படுத்த செபி பல்வேறு நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், ஐ.பி.ஓ., வெளியீடுகள் தொடர்பாக கட்டுப்பாடற்ற கிரே மார்க்கெட் பிரீமியம் (Grey Market Premium - GMP) தகவல்கள் வெளியிடப்படுவதற்கு எதிராக செபி நடவடிக்கை எடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தையில் அதிகமான முதலீட்டு வாய்ப்புகள் கிடைப்பதுடன், முதலீட்டாளர்களுக்கு அவை குறித்த போதிய புரிதலும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

7 மாதங்களில் ரூ.9 லட்சம் கோடி நிதி திரட்டல்

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், இந்திய நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் வாயிலாக சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக செபி தலைவர் தெரிவித்தார்.

சந்தைகள் வளர்ச்சியடையும் வேகத்துக்கு ஏற்ப ஒழுங்குமுறை விதிமுறைகளும் தொடர்ந்து மாற வேண்டும் என்றும், அதே நேரத்தில் சந்தையின் நியாயமான செயல்பாடு, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக, விதிமுறைகளை தொடர்ந்து சீரமைத்து, சந்தை பங்கேற்பாளர்களுடன் ஆலோசித்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்வதே செபியின் அணுகுமுறை என்றும் பாண்டே தெரிவித்தார்.

'உகந்த ஒழுங்குமுறையே செபியின் நோக்கம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.