கிரிப்டோகரன்சிகளுக்கான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்களை வாங்கவும், விற்கவும் தடை விதித்து, 2018-ஆம் ஏப்ரல் 6-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பாணையை வெளியிட்டது. அவற்றால் நிதி, பொருளாதாரம் மற்றும் சட்டரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதை எதிர்த்து, இணையதளம் மற்றும் செல்பேசி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபலி நாரிமன், அனிருந்தா போஸ், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அதில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கி தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்பு, நடைமுறையில் உள்ள ரூபாய் நோட்டு வர்த்தகத்தை கிரிப்டோகரன்சி எந்த வகையிலும் பாதிக்காது என வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கிரிப்டோகரன்சிக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். ரிசர்வ் வங்கி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் போதுமானதாகவும், திருப்தியளிக்கக்கூடியதாகவும் இல்லை எனக் கூறிய அவர்கள், கிரிப்டோகரன்சிகள் மூலம் வங்கிப் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் அனுமதியளித்தனர். நடைமுறையில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுபவரின் கணக்கு முடக்கப்பட்டால் அதை விடுவிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், பிட் காயின் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

