பாரத ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவிகிதம் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்திற்கான கடனுக்கான வட்டி விகிதம் 8.9 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கான கடனுக்கான வட்டி விகிதம் 9.05 சதவிகிதத்தில் இருந்து 8.15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் மற்றும் இரண்டு வருடங்களுக்கான கடன் விகிதங்களையும் குறைத்துள்ளதாக, எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வர்த்தகப் போட்டி காரணமாக ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், பஞ்சாப் நேஷனல், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. 0.15 சதவிகிதம் முதல் 0.7 சதவிகிதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 0.35 சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது. இதையடுத்து, வீட்டுக் கடன் வட்டி கடந்த 6 ஆண்டகளில் இல்லாத அளவு குறைகிறது. வட்டிக் குறைப்பால் வீட்டுக் கடனுக்கான வட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு சுமார் 30 ரூபாய் குறையும். மாதத் தவணை மாறாமல் நீடித்தால், செலுத்த வேண்டிய காலக்கெடு குறைய வழி ஏற்பட்டுள்ளது.