கச்சா எண்ணெய் விலை: ரஷ்யா, சவுதி அறிவிப்பால் சரிவு
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் தெரிவித்துள்ளன. இத்தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3% குறைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டின் 2வது பாதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும் என சவுதி அரேபிய அமைச்சர் காலில் அல் ஃபலே தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் உற்பத்தியை எந்தளவுக்கு உயர்த்துவது என்பது குறித்து ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகளுடன் அடுத்த மாதம் விவாதிக்கப்படும் என ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்தாண்டு 60 டாலருக்கு கீழ் குறைந்ததால் எண்ணெய் வள நாடுகள் அதன் உற்பத்தியை குறைத்தன. இதனால் விலை 80 டாலரை கடந்துவிட்ட நிலையில் உற்பத்திக் கட்டுப்பாட்டை தளர்த்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது