உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்

உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்

பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்:

பெட்ரோல் மீது மத்திய அரசு கலால் வரி, செஸ் வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரிகளை விதிக்கும் நிலையில், கலால் மற்றும் செஸ் ஆகிய இரு வரிகளே அதிக அளவு விதிக்கப்படுகிறது. இதில் கலால் வரி மாநிலங்களுக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் செஸ் வரி முழுவதும் மத்திய அரசுக்கு செல்லக்கூடியது. இந்த செஸ் வரி 2014 ஆம் ஆண்டில் 12% அளவில் விதிக்கப்பட்டு வந்தது. அதன் பின் 2017 ஆம் ஆண்டில் 17.46 % ஆக உயர்ந்த செஸ் வரி, 2020 ஆம் ஆண்டில் 22.98 % ஆக அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டின் இறுதியில் செஸ் வரி 32.9% ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து படிப்படியாக செஸ் வரி குறைக்கப்பட்டு தற்போது 27.9% என்ற அளவில் உள்ளது.

இந்த வரிகளுடன் மத்திய அரசால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு கூடுதலாக விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி விதிக்கப்படுகிறது. அதே வேளையில் ஒவ்வொரு மாநில அரசும் வெவ்வேறு வரி விதிப்பு முறைகளை பின்பற்றுகின்றன. தமிழகத்தில் பெட்ரோலின் அடிப்படை விலையின் மீது 13% வாட் வரியும் கூடுதலாக ரூ. 11.52 வரியும் வசூலிக்கப்படுகிறது. 2014 முதல் இந்த வரி விதிப்பில் தமிழக அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலால் வரி குறைப்பு! - மத்திய நிதியமைச்சர்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8-ம் டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என தெரிவித்தார். விலை குறைப்பின் மூலமாக மத்திய அரசுக்கு கலால் வரியின் மூலம் கிடைக்கக்கூடிய 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

முதலில் வரியை குறைத்தது நாங்கள்தான் - தமிழக நிதியமைச்சர்:

2014 முதல் 2021 வரை மத்திய அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இறுதியாக தமிழக அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதன்முதலாக 2021 நவம்பரில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பதற்கு முன்பே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு, 2021 ஆகஸ்டில் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.3 அளவிற்கு குறைத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு இந்த விலைக் குறைப்பினால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாவும் தமிழக மக்களின் சுமையை குறைக்கும் வகையில் கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும் இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2006-11 ஆட்சிக் காலத்திலும் சாமானியர்களின் நலனுக்காக பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தது திமுக அரசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய அரசின் வரிகள் உயர்ந்தாலும் மாநிலங்களுக்கு பலன் இல்லையே”

கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தாலும், மாநிலங்களுக்கான வருவாயில் ஏற்ற அதிகரிப்பு இல்லை என்றும் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் அதே நேரத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைப்பதாகவும் பழனிவேல் தியாகராஜன் சாடியுள்ளார்.

மத்திய அரசின் மொத்த வரிகள்:

தேதி பெட்ரோல் டீசல்
01.08.2014 ரூ. 9.48 ரூ. 3.57
01.11.2021 ரூ. 32.90 ரூ. 31.80
04.11.2021 ரூ. 27.90 ரூ. 21.80
22.05.2022 ரூ. 19.90 ரூ. 15.80

மத்திய அரசு வரிகளை குறைத்தாலும், 2014ம் ஆண்டை விட பெட்ரோல் மீது ரூ. 10.42 அதிக வரி விதிப்பதாகவும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.12.23 அதிக வரி விதிப்பதாகவும் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, மத்திய அரசு தனது வரியை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

03.11.2021 அன்று அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் கலால் வரி குறைப்பு காரணமாக தமிழகத்திற்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1,050 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய கலால் வரிக் குறைப்பு மேலும் சுமார் ரூ. 800 கோடி இழப்பை தமிழக அரசுக்கு ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் அதிகப்படியான வரி அதிகரிப்பு தற்போது ஓரளவு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது என்றும் 2014 விகிதங்களுடன் ஒப்பிடுகையில் வரிகள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரிகளை பலமுறை உயர்த்தியபோது, மத்திய அரசு ஒருபோதும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை என்பதை குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வரிகள் - தமிழக நிலவரம்:

தேதி 27 ஜனவரி 2022 21 மே 2022 22 மே 2022
அடிப்படை விலை ரூ.48.23 ரூ.55.85 ரூ.57.13
மத்திய அரசின் வரிகள் ரூ.27.90 ரூ.27.90 ரூ.19.90
டீலர் கமிஷன் ரூ.3.80 ரூ.3.80 ரூ.3.80
மாநில அரசின் வரிகள் ரூ.21.46 ரூ.23.30 ரூ.21.80
மொத்த விலை ரூ.101.39 ரூ.110.85 ரூ.102.63

மீண்டும் தினசரி விலை உயர்வு துவங்கும் - ராகுல் காந்தி

கடந்த மார்ச் மாதத்தில் இருந்த பெட்ரோல் விலையை 10 ரூபாய் அதிகரித்து மீண்டும் பழைய விலைக்கு குறைத்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மீண்டும் தினசரி விலை உயர்வு தொடங்கக்கூடும் என்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com