சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக உயர்வு - என்ன காரணம்?

சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக உயர்வு - என்ன காரணம்?
சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக உயர்வு - என்ன காரணம்?

உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால், ஜனவரி 2022-ல் 7 மாதங்களுக்குப் பிறகு சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம், 2022-ம் ஆண்டு ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் (CPI) கணக்கிடப்படும் சில்லறை விலை பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் சிறிது அதிகம்.

இதன்மூலம் 7 மாதத்திற்குப் பின் முதல் முறையாக சில்லறை விலை பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சில்லறை விலை பணவீக்கம், அதிகப்படியாக 6.60 சதவீதமாக உயர்ந்து இருந்தது. சில்லறை விலை பணவீக்க உயர்வுக்கு உணவுப் பொருட்கள் முக்கியக் காரணமாக உள்ளது. டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், ஜனவரி மாதம் தானியங்கள், முட்டை, பால் விலை அதிகரித்துள்ளது.

உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், கடந்த டிசம்பரில் 4.05 சதவிகிதமாக காணப்பட்ட நிலையில், ஜனவரியில் 5.43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆனால் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6 சதவீதம் என்ற அளவில் உயர்வதால், கவலை கொள்ளத் தேவையில்லை என்றும்,  ஏனெனில் ரிசர்வ் வங்கி முன்கூட்டியே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது என்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வகைகளுக்கான பணவீக்கம் 18.7 சதவிகிதமாகவும், எரிபொருள், ஆடைகள், காலணி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டவற்றுக்கான பணவீக்கம் 9 சதவிகிதமாகவும் ஜனவரியில் அதிகரித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை தொடர்ந்து தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பீப்பாய் 95 டாலரை எட்டியுள்ளது. அதேநேரத்தில் மொத்த விற்பனை விலை அடிப்படிடையில் கணக்கிடப்படும் பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில் 12.96 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் 13.56 சதவிகிதமாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com