ஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ

ஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ
ஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ

ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களில் விலையேற்ற அறிவிப்பை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் ஒரு சில வாரங்களில் விலையேற்றம் இருக்கும் என அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஜியோ நிறுவனம் வந்த பிற்கு தொலைத்தொடர்பு புரட்சி ஒன்று ஆரம்பித்துவிட்டது என்றே பலரும் கூறினார்கள். ஜியோ கொடுத்த இலவச ஆஃபர்கள் மற்றும் விலை மலிவு ஆஃபர்களால் மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்டவை கடும் சரிவை சந்தித்தன. இதற்கிடையே ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது தனிக்கதை. ஜியோவை சமாளிக்க ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவங்களும் ஆஃபர்களை அள்ளிக்கொடுத்தன. இருந்தாலும் ஜியோவிற்கு குறைந்த காலத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்தவிட்டனர். 

அதற்கு காரணம் ஜியோவின் இலவச அன்லிமிடெட் போன் கால் சேவையாகும். ஜியோவில் ரிசார்ஜ் செய்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போன் கால் பேசிக்கொள்ளலாம் என்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் மற்ற நிறுவனங்களும் தங்கள் பேக்கேஜ்களுடன் இலவச அன்லிமிடெட் சேவையை வழங்கத் தொடங்கின. இதனால் இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் ஆஃபர் மழையில் நனைந்து வந்தனர். இது ஒருபுறம் இருந்தாலும், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக பெரும் முன்னேற்றத்தை காணவில்லை. 

இந்த நேரத்தில் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் போன் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஜியோ அறிவித்தது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியாக அமைந்தது. இதனை ஏர்டெல் நிறுவனம் கிண்டல் செய்தது. இதனால் ஜியோ மற்றும் ஏர்டெல் இடையே நேரடி சமூக வலைத்தள சண்டைகள் நடந்தன. அதேசமயம் ஜியோவின் போன் கால் கட்டண அறிவிப்பால் அதன் வர்த்தகத்தில் பங்குகள் உயர்ந்தன. 

இந்நிலையில், தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் அறிவித்தன. இதனால் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் பங்குகளின் விலை இன்று பங்குச் சந்தையில் சற்று அதிகரித்தன. 

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவும் தங்கள் சேவைக் கட்டணத்தை இன்னும் சில வாரங்களில் உயர்த்துவோம் என அறிவித்திருக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பில், ‘மற்ற ஆப்ரேட்டர்களை போன்று தாங்களும் அரசுடன் இணைந்தும் செயல்படுவோம். எங்கள் நிறுவன பணியாளர்களின் நன்மைக்காக சில வாரங்களில் எங்கள் சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இலவசமாக இருந்த கால் சேவையை, ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ஜியோ தெரிவித்திருந்தது. மற்ற வாடிக்கையாளர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருந்த ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது நாமும் மற்றவர்களைப் போல் ஆகிவிடுவோமா என்று கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com