'2 ஆண்டுக்கு முன் ரூ.1,200 கோடி மதிப்பு...' - ரிலையன்ஸின் ரூ.182 கோடி 'டீல்' தரும் பாடம்!

'2 ஆண்டுக்கு முன் ரூ.1,200 கோடி மதிப்பு...' - ரிலையன்ஸின் ரூ.182 கோடி 'டீல்' தரும் பாடம்!
'2 ஆண்டுக்கு முன் ரூ.1,200 கோடி மதிப்பு...' - ரிலையன்ஸின் ரூ.182 கோடி 'டீல்' தரும் பாடம்!

ஆன்லைன் பர்னிச்சர் பிரிவில் செயல்பட்டுவரும் 'அர்பன் லேடர்' நிறுவனத்தை வாங்கியிருப்பது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான டீல். இரு ஆண்டுகளுக்கு முன்பு 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இருந்த நிறுவனத்தை ரூ.182 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இந்த டீலில் கற்றுக்கொள்ளத்தக்க பாடங்கள் இருக்கின்றன. 

ஒருபுறம் முதலீட்டை திரட்டும் பணியில் இருந்தாலும், மறுபுறம் நிறுவனங்களை கையகப்படுத்தும் வேலையையும் ரிலையனஸ் செய்துவருகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் பார்மஸி நிறுவனமான நெட்மெட்ஸ்-ஐ கையகப்படுத்தியது. தற்போது ஆனலைன் பர்னிச்சர் பிரிவில் செயல்பட்டுவரும் 'அர்பன் லேடர்' நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெய்ல் பிரிவான 'ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்' நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் (2023-ம் ஆண்டுக்குள்) ரூ.75 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், மீதமுள்ள 4 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கான உரிமையையும் ரிலையன்ஸ் பெற்றிருக்கிறது.

ரூ.182 கோடி மட்டுமே!

இ-காமர்ஸ் நிறுவனத்தை 182 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது பெரிய தொகையாக தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை. அர்பன்லேடர் நிறுவனம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 750 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை திரட்டி இருக்கிறது. 'எஸ்ஏஐஎப் பார்னர்', 'கலாரி கேபிடல்', 'ஸ்டெட்வியூ கேபிடல்' மற்றும் 'செக்யோயா கேபிடல்' ஆகிய நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.

ஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல் முக்கியமாக நகரங்களில் ஸ்டோர்களையும் இந்த நிறுவனம் அமைத்திருக்கிறது. 2018-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,200 கோடியாக கணிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ரூ.750 கோடியாக கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது 182 கோடி ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலிடு செய்த தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே திரும்ப கிடைத்திருக்கிறது.

என்ன பிரச்னை?

பிரச்னையை பற்றி பார்ப்பதற்கு முன்பு, இந்தப் பிரிவின் பிஸினஸ் மாடலை பார்ப்போம். ஒவ்வொரு பொருள் வாங்குவதற்கும் ஓர் இடைவெளி உண்டு. அத்தியாவசிய பொருட்கள் அடிக்கடி வாங்குவோம். பயணம் அவ்வப்போது செய்வோம். ஆனால், பர்னிச்சர் என்பது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வணிகம். அதனால் ஒவ்வொரு முறையும் புதுபுது வாடிக்கையாளர்களை தேடவேண்டும் என்பது இந்தத் தொழிலின் அடிப்படை விதி.

தவிர, இந்த ஆன்லைன் பர்னிச்சர் என்பது வேகமாக வளரந்துவரும் துறையாக இருந்தாலும், ஒட்டுமொத்த வணிகத்தில் மூன்று சதவீதம் மட்டுமே. பர்னிச்சர் சந்தையின் மதிப்பு 1,700 கோடி டாலர் என்றால், இதில் மூன்று சதவீதம் மட்டுமே ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.

2015-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டது. 'அர்பன் லேடர்' மற்றும் 'பெப்பர்பிரை' (2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது) ஆகிய நிறுவனங்கள் முக்கிய சந்தையை கைப்பற்றின. இ-காமர்ஸ் முறையில் விற்பனை நடந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு டச் அண்ட் ஃபீல் (Touch and Feel) கொடுப்பதற்காக ரீடெய்ல் ஸ்டோர்களை இந்த நிறுவனங்கள் தொடங்கின. முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்ததால் தொடர்ந்து நிதி கிடைத்து வந்தது. 2015-ம் ஆண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பர்னிச்சர் பிரிவைத் தொடங்கின.

தவிர, பர்னிச்சர் பிரிவில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமான 'ஐகேஇஏ' ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செயல்பட தொடங்கியது. தற்போது ஹைதராபாத்தில் மிகப்பெரிய ரீடெய்ல் ஸ்டோரை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அத்துடன், பூனே மற்றும் மும்பை நகரங்களில் அடுத்த சில மாதங்களில் ஸ்டோர்களை தொடங்க இருக்கிறது. மேலும், முக்கியமான நகரங்களிலும் தொடங்க இருக்கிறது. அத்துடன், இணையம் மூலமாகவும் விற்பனை செய்துவருவதால் ஆன்லைன் பர்னிச்சர் என்னும் துறையில் இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது.

அதனால் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விரிவாக்கப் பணிகள் குறைக்கப்பட்டன. பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள். தவிர, நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜீவ் ஸ்ரீவஸ்தவா ஓர் ஆண்டுக்கு முன்பு நிறுவனத்தில் இருந்து விலகினார். நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான கலாரி கேபிடல் நிறுவனத்தின் வானி கோலாவும் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார்.

ஆன்லைன் பர்னிச்சர் பிரிவில் மட்டுமே செயல்படும் மற்றொரு பர்னிச்சர் நிறுவனமான பெப்பர்பிரை சமீபத்தில் 4 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்தது. பிடிலைட் நிறுவனம் இந்த முதலீட்டை செய்திருக்கிறது. இதனால் பெப்பர் பிரையின் சந்தை மதிப்பு 46 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.

நிறுவனத்தின் நிறுவனர் வெளியேறிவிட்டார், சப்ளை செயின் உள்ளிட்ட பிரச்னைகள், லாப பாதைக்கு திரும்ப வேண்டும், புதிய முதலீட்டுக்கு யாரும் தயாராக இல்லை என்னும் சூழலில் நிறுவனத்தை விற்பதைத் தவிர அர்பன் லேடருக்கு வேறுவழியில்லை.

அர்பன் லேடர் விற்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. முக்கியமான பிராண்ட் காப்பாற்றப்பட்டிருக்கிறது, பணியாளர்களின் வேலையும் பறிபோகாது. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். லாபம் முக்கியம் என்பதே.

புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் லாபத்தை குறிக்கோளாக இல்லாமல் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவருகின்றன. வளர்ச்சி முக்கியம். ஆனால், அதிக தள்ளுபடி கொடுத்து, நஷ்டத்தில் வளர்ச்சியை தக்கவைத்துகொண்டால் நிறுவனத்தையும் தள்ளுபடியிலேயே விற்க வேண்டும் என்பதே அர்பன்லேடர் உணர்த்தும் பாடம். அதற்காக நிறுவனர்களை குறைத்து மதிப்பிடுவதும் தவறு.

ரிலையன்ஸுக்கு என்ன?

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இது சிறப்பான டீல். இரு ஆண்டுகளுக்கு முன்பு 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இருந்த நிறுவனத்தை 182 கோடிக்கு வாங்கி இருக்கிறது. ஏற்கெனவே ரீடெய்ல் பிரிவில் கணிசமான சந்தை இருக்கிறது. பியூச்சர் குழுமத்தை வாங்கும் நடவடிக்கையிலும் இறங்கி இருக்கிறது. ஆன்லைன் பார்மஸி நிறுவனமான நெட்மெட்ஸை வாங்கி இருக்கிறது. தற்போது பர்னிச்சர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. ரீடெய்ல் துறையில் ஒவ்வொரு பிரிவையும் இணைந்துக்கொண்டே வருகிறது. Never waste a good crisis என தொழில் ஆலோசகர்கள் கூறுவார்கள். அதற்கேற்ப இந்த நெருக்கடியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட நிறுவனம் ரிலையன்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com