மத்திய அரசுக்கு ரூ.99,122 கோடியை பங்கு ஈவுத் தொகையாக அளிக்கிறது ரிசர்வ் வங்கி
மத்திய அரசுக்கு ரூ.99,122 கோடியை பங்கு ஈவுத் தொகையாக ரிசர்வ் வங்கி வழங்கவுள்ளது. இது, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கான செலவுகளை சமாளிக்க உதவும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி வசம் உள்ள உபரித் தொகையான ரூ.99,122 கோடியை அரசுக்கு வழங்கும் முடிவு ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் காணொலி முறையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. கொரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் மற்றும் கூடுதல் செலவுகளை சமாளிக்க ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள இந்நிதி பயனுள்ளதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய 2020ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.57,128 கோடி வழங்கிய நிலையில், இந்த ஆண்டு அது ரூ.99,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பங்கு ஈவுத் தொகையாக ரூ.45,000 கோடி ரூபாய் வரும் என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதை விட 2 மடங்குக்கும் அதிகமான தொகை தரப்பட உள்ளது. கணக்குப்பதிவு நடைமுறைகள் மாற்றம், வெளிநாட்டு சொத்துகளை கையாளுதலில் மாற்றம் உள்ளிட்ட வழிமுறைகளில் ரிசர்வ் வங்கியின் வருவாய் அதிகரித்ததாக கூறப்படுகிறது.