புதிதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை

புதிதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை

புதிதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை
Published on

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைனர்ஸ் கிளப் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டில் கார்டுகளை புதிதாக விநியோகம் செய்ய ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. இந்த தடை உத்தரவு, மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்குள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தகவல் பதிவேற்றுவது குறித்த விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்பதால், இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. பேமென்ட் தொடர்பாக பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா ஸ்டோரேஜ் மையம் அமைக்க வேண்டும் என 2018-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாததால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவு தொடராக நாங்கள் விவாதித்து வருகிறோம் என அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது

பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி 15 லட்சத்துக்கு மேலான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டைனர்ஸ் கிளப் தனியாக கார்டுகளை வழங்குவதில்லை. ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து கார்டுகளை வழங்குகிறது. இந்த இரு கார்டுகளும் ப்ரீமியம் கார்டுகள் ஆகும். சர்வதேச அளவில் பயணம் செய்பவர்கள் இந்த வகையான கார்டுகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கடந்த டிசம்பரில் ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை இணைக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. போதுமான அளவுக்கு தொழில்நுட்ப கட்டமைப்பை உயர்த்தவில்லை என்பதால் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டது. இதனால் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகளின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களின் வளர்ச்சி கடந்த மூன்று மாதங்களில் வேகமாக வளர்ந்திருக்கிறது.

2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி வரையில் ஐசிஐசிஐ வங்கி 6.65 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கி இருக்கிறது. இந்த காலத்தில் புதிதாக சந்தைக்கு வந்த கார்டுகளில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 43 சதவீதமாகும். இருந்தாலும் கிரெடிட் கார்ட் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருப்பது ஹெச்டிஎப்சி வங்கிதான்.

ஹெச்டிஎப்சி வங்கி மீதான தடை ஆறு மாதங்களுக்கு பிறகு பரிசீலனை செய்யப்படும் என தெரிகிறது. அதேசமயத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் தொழில்நுட்பம் குறித்து ஆடிட் செய்வதற்கு தனியார் நிறுவனத்தை ரிசர்வ் வங்கி நியமனம் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிக்கையை பொறுத்தே ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் பிஸினஸ் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com