வணிகம்
அத்துமீறி திறக்கப்பட்ட மளிகைக்கடை: அதிகாரத்தை கையிலெடுத்த இளைஞர்கள்..! பறந்த காய்கறிகள்
அத்துமீறி திறக்கப்பட்ட மளிகைக்கடை: அதிகாரத்தை கையிலெடுத்த இளைஞர்கள்..! பறந்த காய்கறிகள்
144 தடை உத்தரவு இருக்கின்ற சூழலில் அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி தொடர்ந்து கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி மண்டியில் உள்ள பொருட்களை இளைஞர்கள் சிலர் சாலையில் கொண்டு வந்து போட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் சேர்ந்து இளைஞர்களும் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை அரசு அனுமதித்த கடைகளை வைத்துவிட்டு அதன் பிறகு அனைத்து கடைகளும் மூடி வந்த நிலையில், காய்கறிகளை மொத்த கொள்முதல் செய்து, ஏற்றுமதி செய்யும் காய்கறி கடை உரிமையாளர் ஒருவர் தொடர்ந்து இரவு வரை கடையை மூடாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவரிடம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாகவும் இளைஞர்கள் சார்பாகவும் பலமுறை வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த வியாபாரி தொடர்ந்து கடையை வைத்து வந்த சூழலில் இன்று மாலை மீண்டும் இளைஞர்கள் அவரிடம் சென்று கடையை அடைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர் கடையை மூட மறுத்த நிலையில் கடை முன்பு வைத்திருந்த காய்கறி மூட்டைகளைச் சாலைகள் அருகில் கொண்டுவந்து இளைஞர்கள் வைத்தனர்.
இதன் பிறகு ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் இரு தரப்பினரிடமும் சமரசத்தை ஏற்படுத்தி கடையை மூடச் செய்தனர். இனிமேல் அரசு நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி காய்கறி மண்டி உரிமையாளர் கடை வைக்க மாட்டார் என்று நினைத்த நிலையில் திடீரென்று மீண்டும் இன்று மாலை கடையைத் திறந்து வியாபாரம் செய்து வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியூரிலிருந்து இரவு வரை வரும் நபர்களை தடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.