புத்துணர்வு பெறும் ஆயத்த ஆடை உற்பத்தி.. ஈரோடு மாவட்டத்தில் குவியும் ஆர்டர்கள்

புத்துணர்வு பெறும் ஆயத்த ஆடை உற்பத்தி.. ஈரோடு மாவட்டத்தில் குவியும் ஆர்டர்கள்
புத்துணர்வு பெறும் ஆயத்த ஆடை உற்பத்தி.. ஈரோடு மாவட்டத்தில் குவியும் ஆர்டர்கள்

உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றன. பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஊரடங்குகள் தொடர்கின்றன. இந்த நிலையில், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளதால், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக தினமணி நாளிதழ் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் நகரைத் தவிர, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரு நூறுக்கும் அதிகமான ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளிலும் பல நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்கள் வந்தன. பின்னர் கொரோனா காரணமாக ஐந்து மாதங்களாக ஆயத்த ஆடை தொழில் முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதனால் மாதந்தோறும் ரூ. 100 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன.

மொத்தமாக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 700 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பிவருவதால், ஜூலை கடைசி வாரத்தில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. ஈரோடு பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடந்த 15 நாட்களில் ஏறத்தாழ ரூ.100 கோடி அளவுக்கு ஆர்டகள் கிடைத்துள்ளன.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்த விலை, சிறந்த தரம், குறித்த நேரத்தில் விநியோகம் ஆகியவற்றை இந்திய ஏற்றுமதியாளர்கள் அளிப்பதால், சர்வதேச நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு மதிப்பு உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com