ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை - மத்திய, மாநில அரசுகளுக்கு 'பங்கு' என்ன? - ஒரு தரவுப் பார்வை

ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை - மத்திய, மாநில அரசுகளுக்கு 'பங்கு' என்ன? - ஒரு தரவுப் பார்வை
Petrol Price
Petrol PricePetrol Price

கடந்த 2011-ம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலராக இருந்தது. அப்போது லிட்டர் பெட்ரோலின் விலை 60 ரூபாயாக இருந்தது. 2013-ம் ஆண்டு வரை கச்சா எண்ணெயின் விலை அதிகபட்சமாக உயர்ந்தாலும், பெட்ரோலின் விலை 75 ரூபாயாக மட்டுமே இருந்து வந்தது. 2016-2017 காலக்கட்டங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 47 டாலராக இருந்தாலும் பெட்ரோலின் விலை 70 ரூபாய்க்கு மேலாகவே அதிகரித்துக் கொண்டிருந்தது. இதற்கு காரணம் அரசு பெட்ரோலின் மீது கூடுதல் வரி விதித்ததே. இதனால் கச்சா எண்ணெயின் விலை குறைக்கப்பட்டாலும், பெட்ரோலின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றது.

கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை: 2016-ம் ஆண்டு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 62 ரூபாய்க்கும், 2017-ல் 74.28 ரூபாய்க்கும், 2018-ல் 76.29 ரூபாய்க்கும், 2019-ல் 75.67 ரூபாய்க்கும், 2020-ல் 72.28 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால், 2021-ல் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னையில் 2021-ல் ஜனவரி மாதம் 86.51 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் பெட்ரோல் விலை, 6 மாதத்துக்குள், அதாவது ஜூலை மாதத்தில் 100.13 ரூபாயை எட்டியுள்ளது. 

இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை: 2016-ம் ஆண்டு டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் 62.51 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 2021-ல் 99.16 ரூபாய்க்கும், மும்பையில் 67.11 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள பெட்ரோல் 105.24 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை 2016-ல் ஜூலை மாதம் 62 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல் 2021-ல் 100.13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவிலும், 66.03 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் பெட்ரோல், தற்போது 99.04 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - ஜூலை மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 1 லிட்டர் பெட்ரோல் 98.81 ரூபாய். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 39.29 ரூபாய், கலால் வரி 32.90 ரூபாய், டீலர் கமிஷன் 3.82 ரூபாய், மாநில வாட் வரி 22.80 ரூபாய் என 1 லிட்டர் பெட்ரோல் மொத்தம் 98.81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் படியே அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும், சாலை, கலால் வரி, வாட் வரி மாறுபடும். இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும், பெட்ரோல் விலையில் சிறிது மாறுதல்கள் ஏற்படுகிறது. ஜூலை மாதக் கணக்கின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது தமிழ்நாடு அரசு 15%+13 ரூபாய் வாட் வரி விதித்துள்ளது. டீசல் மீது ஒரு லிட்டருக்கு 11% + 9.62 ரூபாய் வாட் வரி விதித்துள்ளது. எனவே இன்றைய நிலவரப்படி, சென்னையில் சாலை, கலால் வரி, வாட் வரி, இதர செலவுகள் என அனைத்தும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஜூன் 3-ம் தேதி கணக்குப்படி, டெல்லியில் 1 லிட்டர் பெட்ரொல் 99.16 ரூபாய்க்கும், மும்பையில் 105.24 ரூபாய்க்கும், சென்னையில் 100.13 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 99.04 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் கடந்த 30 நாட்களில் 3.81 ரூபாயும், கடந்த 15 மாதங்களில் 27.52 ரூபாயும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர் கூறுகையில், "பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டால், கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருந்த போதிலும், நம்முடைய நாட்டில் பெட்ரோலின் விலையானது சுமார் 35 ரூபாயாகவே இருந்தது. அப்போதைய அரசாங்கத்திடம் பெட்ரோல் விலையை ஏற்ற கூடாது என கொள்கை ரீதியான முடிவு இருந்தது. இந்த முடிவினால் ஒவ்வொரு வருடமும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வந்தன. இந்த நஷ்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என அரசாங்கம் கூறி, 2014-க்கு முன்பு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு Oil bonds (எண்ணெய் பத்திரங்கள்) வழங்கியது. இதற்கு வட்டி 9% ஆக நிர்ணயிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் அசலை திருப்புவதே அரசின் திட்டம். அதுவரை வட்டியை கட்டுவது தான்  Oil bonds திட்டம். இதனால் 2012-லிருந்து ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறது.

ஆனால், 2015-க்கு பிறகு அசலை திருப்புவது கடினமானதால், வட்டி கட்டுவது தடைபட்டது. இதையடுத்து மீண்டும் 2021-ல் 10,000 கோடி ரூபாய் வட்டியை கட்டப்போகிறது. மீதமுள்ள வட்டித்தொகையை அடுத்த 2 ஆண்டுகளில் 27,000 கோடி ரூபாயையும், 36,000 கோடி ரூபாயையும் திருப்பி கொடுக்கவிருக்கிறது. இந்த ஆட்சிக்காலம் முடிந்தபிறகு கூட, கிட்டத்தட்ட 57,500 கோடி ரூபாயை 2025, 2026 ஆண்டுகளில் அரசு திருப்பி கொடுக்க வேண்டும். எனவே அதுவரை 10,000 கோடி ரூபாய் வட்டியை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். இந்த பொறுப்பு தற்போதைய அரசுக்கு மட்டுமல்ல, அடுத்து வரப்போகும் அரசுக்கும் உண்டு.

வெறும் மூன்றரை வருடத்தில் நாம் ஏற்படுத்திக் கொண்ட கடன்களைத் திருப்பி கட்டுவதற்கு நமக்கு 13 வருடங்கள் ஆகின்றது. இந்த பெட்ரோலியம் விலையில் 2000-ம் ஆண்டில் Central Road Fund Act என்ற சட்டத்தை நாடாளுமன்றம் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலமாக ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கும், சாலை செஸ் வரி வாங்கப்பட்டு, செலவு போக, மீதமுள்ள பணத்தை இந்தியா முழுவதும் சாலைகளைச் சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி சேகரிக்கும் பழக்கமாகும். இந்தப் பழக்கம் தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் செஸ் வரி தொடர்ந்து வருகிறது. 13 ஆண்டுகாலமாக எண்ணெய் நிறுவனங்களுடன் தொடரும் இந்த கடன் பிரச்னை, 2026-ம் ஆண்டு தான் முடிக்கப்படும்.

பெட்ரோல் விலை அதிகமாக இருந்தால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அதிக வரி கிடைக்கும். இதனால் வருவாய் பாதிப்பு இல்லாமல் செலவு செய்ய முடியும். அரசுக்கு இருக்கும் செலவுகள் இரண்டு தான். ஒன்று சம்பளம், இன்னொன்று வட்டி. இது அனைத்து அரசுக்கும் பொதுவான ஒன்று.

2019-க்கு பிறகு இரண்டு விதமான செஸ் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி (Central Road and Infrastructure Fund). இரண்டாவது விவசாய உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund). இதில், கடந்த ஆண்டு, மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியில், செஸ் வரியானது பெட்ரோலுக்கும், டீசலுக்கும் 18 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. விவசாய உள்கட்டமைப்பு நிதியில், செஸ் வரியானது பெட்ரோலுக்கு 2.30 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி பார்த்தால் பெட்ரோலுக்கு 20.50 ரூபாயும், டீசலுக்கு 22 ரூபாயும் செஸ் வரி செலுத்துகிறோம். இந்த பணம், மாநிலங்களின் வளர்ச்சிக்கும், முதலீடு சார்ந்த திட்டங்களுக்கும் செல்கிறது. இதனை கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு செய்து வருகிறது. இதன்மூலமாக 2018-2019-ல் 90,000 கோடியும், 2019-2020-ல் 2,30,000 கோடியும் திரட்டியுள்ளனர். தற்போதைய ஆண்டு 2,45,000 கோடி திரட்ட வாய்ப்புள்ளது. சேகரிக்கப்படும் தொகைகள் அனைத்தும் மீண்டும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் ஷியாம் சேகர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com