தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...?

தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...?

தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...?
Published on

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டது. அதேபோல இப்போது 5 மாநில தேர்தலுக்கு பின்பும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுமோ என்ற கலக்கத்தில் வாகன ஒட்டிகள் உள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 15-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அதன் அடிப்படையில் குமாரசாமி ஆட்சி நடத்தி வருகிறார். மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் நேரத்தில் கிட்டத்தட்ட 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல உயர ஆரம்பித்தன. இதனையடுத்து தேர்தல் முடியும் வரை, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு நிர்பந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்தது.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. அக்டோபர் 16-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாய் 10 காசுகளாக இருந்தன. இதன் பின்பும் பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன செய்வதென்று வாகன ஓட்டிகள் தவித்த நிலையில் பெட்ரோல் விலை சரிவு காண ஆரம்பித்தது.

அன்றிலிருந்து சரிய ஆரம்பித்த பெட்ரோல் விலை இன்று வரையும் சரிவு கண்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 72 ரூபாய் 82 காசுகளாக உள்ளன. அதேபோல ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி 80 ரூபாய் 04 காசுகளாக இருந்தன. அதன்பின் தினசரி டீசல் விலை குறைய ஆரம்பித்தது. சென்னையில் இன்று 1 லிட்டர் டீசல் விலை 68 ரூபாய் 26 காசுகளாக உள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டுள்ளன.

இது வாகன ஓட்டிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட 5 மாநில தேர்தலையொட்டித்தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபோது பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டதை போல தற்போதும் 5 மாநில தேர்தல் முடிவகள் வெளியாகி உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவுகிறது. அதேசமயம் பெட்ரோல், டீசல் விலையை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்வதால் 5 மாநில தேர்தல் முடிவுக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. எதுவாக இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறக்கம் காணுமா..? அல்லது விலை உயருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com