பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு மத்திய அரசின் 'செஸ்' வரிதான் காரணமா? - ஒரு பார்வை

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு மத்திய அரசின் 'செஸ்' வரிதான் காரணமா? - ஒரு பார்வை
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு மத்திய அரசின் 'செஸ்' வரிதான் காரணமா? - ஒரு பார்வை

"ஒன்றிய அரசு விதித்துள்ள செஸ் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருக்கிறது" என்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். செஸ் வரி என்றால் என்ன? அதற்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? பெரும்பாலும் மாநில அரசுகள் இந்த வரியை எதிர்ப்பது ஏன்? - இதுகுறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு தனிநபரின் வருமானத்தின் மீதும் வாங்கும் பொருட்களின் மீதும் நேரடியாக விதிக்கப்படுவதற்குப் பெயர் நேரடி வரி. அந்த வசூலிக்கப்படும் வரித் தொகையின் மீது குறிப்பிட்ட சதவிகிதத்தில் தனியாக விதிக்கப்படுவதுதான் 'செஸ்' (cess) வரி; அதாவது ஏற்கெனவே விதிக்கப்படும் வரிக்கு மேல் விதிக்கப்படும் கூடுதல் வரிதான் செஸ் வரி என எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளின் மீது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்றால், 18 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். இந்த வரியாக செலுத்தப்படக்கூடிய 18 ரூபாயின் மீதும் விதிக்கப்படும் கூடுதல் வரிதான் செஸ் வரி என அழைக்கப்படுகிறது.

இந்தக் கூடுதல் வரியினை ஏதாவது ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக விதிக்கப்படுவது என்பது எந்த மத்திய அரசு வந்தாலும் மேற்கொள்ளும் வேலைதான். சாலை மேம்பாட்டிற்கு, கல்விக்கு மருத்துவத்திற்கு, வேளாண் துறைக்கு என பல்வேறு துறைகளுக்கான இந்த செஸ் வரி விதிக்கப்படும். 'தூய்மை இந்தியா' கூட இந்த செஸ் வரி விதிப்பின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம்தான்.

இந்த வரியினை எந்த ஒரு பொருள் மீதும் விதிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது சிகரெட் மீது கூட செஸ் வரி விதிக்கப்பட்டது.

இதில் பிரச்னை என்னவென்றால், எதற்காக இந்த செஸ் வரி வசூலிக்கப்படுகிறதோ, அந்தத் திட்டத்திற்காக மட்டுமே முழுக்க முழுக்க செலவு செய்யப்பட வேண்டும். எனவே, இதன் காரணமாக மாநில அரசுகளுக்கு நேரடியாக இதன் மூலமாக வரி வருவாய் கிடைக்காமல் வருமான இழப்பு ஏற்படும். அதாவது, ஏற்கெனவே ஒரு வரி இருக்கும்; அதற்கு மேல் மத்திய அரசு செஸ் வரி விதிக்கும்; அதற்கு மேல் மாநில அரசு வரி விதித்தால் அந்தச் சுமை மக்கள் தாங்க முடியாததாக மாறிவிடும்.

மேலும், செஸ் வரியால் ஏற்படும் விலை உயர்வுக்கு மாநில அரசுகளும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய சூழல் உருவாகும். தற்பொழுது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை கேட்பது போன்று எல்லா மாநிலங்களிலும் சூழல் உருவாகும்.

கடும் நெருக்கடியில் நாட்டு மக்கள் இருந்தபோதும் நடப்பு பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை மீது வேளாண் துறைக்கான செஸ் வரியை மத்திய அரசு விதித்தது. அதாவது பெட்ரோல் மீது 2.5 ரூபாய் வரையும், டீசல் மீது 4 ரூபாய் வரையும் கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.30,000 கோடி வசூல் ஆகும் என்றும், அது வேளாண் திட்டங்களுக்காக செலவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிரச்னை என்னவென்றால் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.3.59 லட்சம் நிதி பல்வேறு வகைகளில் செஸ் வரியின் மூலம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இவை பெரும்பாலும் செலவு செய்யப்படாமலேயே இருக்கிறது.

இதனை சுட்டிக்காட்டிதான் தமிழக நிதியமைச்சர் இன்றைய தினம் சட்டமன்றத்தில் பேசினார். எதுவானாலும் ராக்கெட் வேகத்தில் போகும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறைந்தபட்சம் வேகமாவது குறையுமா என்பதே சாமானியரின் ஏக்கம்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com