பணம் பண்ண ப்ளான் B - 14: வரி சேமிப்பும் முதலீடு தேர்வும் - சில புரிதல்கள்

பணம் பண்ண ப்ளான் B - 14: வரி சேமிப்பும் முதலீடு தேர்வும் - சில புரிதல்கள்

பணம் பண்ண ப்ளான் B - 14: வரி சேமிப்பும் முதலீடு தேர்வும் - சில புரிதல்கள்
Published on
நடுத்தர மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களின் மிகப்பெரிய சிக்கல் வரி சேமிப்புதான். வரியை சேமித்து எப்படியாவது கூடுதல் 'டேக் ஹோம்' சம்பளத்தை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் மிகப்பெரிய இலக்கு. அதனால் கிடைத்த நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வரியை சேமித்து விடுவார்கள். ஆனால் வரி சேமிப்பு மட்டும்தான் இலக்கா? ஒரு முதலீடு எப்படி பரிமாற்றம் அடைகிறது மற்றும் அதற்கான வரி சலுகைகள் என்ன என்பதை தெரிந்தால்தான் சரியான முதலீட்டை தேர்வு செய்ய முடியும்.
மூன்று விஷயங்கள் உள்ளன.
· முதலீடு செய்யும் தொகை
· முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானம்
· முதிர்வின் போது கிடைக்கும் தொகை
என மூன்று கட்டங்கள் உள்ளன. இதில் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு கிடைக்கும் வரிச்சலுகை குறித்து மட்டுமே நாம் பெரிதும் கவலைப்படுகிறோம். அதன் பிறகான விஷயங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை அல்லது அந்த புரிதல் நமக்கு இல்லை.
ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கும் வரிச்சலுகையை பொறுத்து பிரதானமான மூன்று பிரிவுகள் உள்ளன. EEE, EET மற்றும் ETE ஆகிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் எப்படி செயல்படுகிறது அதில் உள்ள முதலீடு திட்டங்கள் என என்பது குறித்து தெரிந்துகொண்டால் வரி சேமிப்பு மட்டுமல்லாமல், நீண்ட கால நோக்கில் சரியான முடிவை முதலீட்டாளர்கள் எடுக்க முடியும்.
EEE (exempt exempt exempt)
இந்த பிரிவில் மூன்று கட்டங்களிலும் வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். முதலீடு செய்யும் தொகை, முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானம் மற்றும் முதிர்வின் போது கிடைக்க கூடிய தொகை என இந்த பிரிவில் அனைத்து இடங்களிலும் வரிச்சலுகை பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலும் நிலையான வருமானம் திட்டங்கள்தான் என்றாலும் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பும் பிரிவு இது. குறிப்பாக அதிக வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
இபிஎப், பிபிஎப், சுகன்யா சம்ரிதி, ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உள்ளிட்டவை இந்த பிரிவில் வரும்.
EET
இந்த பிரிவில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்துக்கும் வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலீட்டை வெளியே எடுக்கும்போது வரி செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த பிரிவில் இ.எல்.எஸ்.எஸ் ( வரி சேமிப்பு மியூச்சுவல் பண்ட்கள்), பென்ஷன் திட்டங்கள் ஆகியவை வரும்.
ETE
இந்த பிரிவில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்தியாக வேண்டும். ஆனால் முதிர்வின்போது வரி செலுத்த தேவையில்லை.
உதாரணத்துக்கு வரி சேமிப்புக்காக இருக்கும் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யும்போது வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த டெபாசிட்கள் மீது கிடைக்கும் ஆண்டு வட்டியை வருமானமாக கருதி வரி செலுத்த வேண்டி இருக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமும் இதே பிரிவில் வரும்.
அதனால் வரி சேமிப்பு மட்டுமே குறியாக இருந்தால் முதலீட்டை வெளியே எடுக்கும்போது அல்லது முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்தியாக வேண்டும். அதனால் முதலீடு, முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானம் மற்றும் முதிர்வின் போது என்ன செய்ய வேண்டும் என அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பிறகே முதலீட்டை செய்ய வேண்டும்.
தெரிந்துகொள்ள மேலும் சில..
· 80 சி பிரிவில் டேர்ம் பாலிசிகளுக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். இதில் வருமானமோ அல்லது முதிர்வோ கிடையாது. பாலிசிதாரர் மரணம் அடையும்போது பாலிசி தொகை வழங்கப்படும். வருமானம் மற்றும் முதிர்வு கிடையாது என்பதற்காக இதனை தவிர்க்க கூடாது.
· என்னுடைய வரி சேமிப்பு வரம்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இருந்தாலும் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் வரி சேமிப்பு பத்திரங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கிடைக்கும் வருமானம் மற்றும் முதிர்வு தொகைக்கு வரி ஏதும் செலுத்த தேவையில்லை. இது tax exempt exempt என்னும் பிரிவின் கீழ் வரும்.
· கிடைக்கும் வருமானத்துக்கு மட்டும் வரி செலுத்த தேவையில்லை, முதர்வுக்கு மட்டும் வரி செலுத்த தேவையில்லை என மேலும் சில பிரிவுகள் உள்ளன.
ஒரு முதலீட்டை வரி சேமிப்புக்காக மட்டுமே செய்யக்கூடாது. அதன் இலக்குகள் என்ன? எந்த இடத்தில் வரியை சேமிக்க முடியும், எங்கு வரி செலுத்துவது, நமக்கு உகந்ததாக இருக்கும் என பல விஷயங்களை பரிசீலனை செய்து முதலீடு செய்தால் பெரிய பலனை அனுபவிக்க முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com