வங்கிகளுக்கு விரைவில் மூடுவிழா: நிதி ஆயோக் தலைமை செயலதிகாரி கணிப்பு
குறைந்த செலவிலான இணையவழி வங்கி பணபரிவர்த்தனைள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் கிட்டும் வணிகரீதியிலான பலன்கள் ஆகியவற்றால் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் வங்கிகள் மூடப்படும் என்ற அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயலதிகாரி அமிதாப் கண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி பேசிய அமிதாப் கண்ட், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் வங்கிகள் மெல்ல மூடப்படுவதை நாம் பார்க்கலாம். வங்கிகளை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டுவது எதிர்காலத்தில் பெரும் சுமையாக மாறும். மொபைல் போன்கள் மற்றும் இணைய வழி பணபரிமாற்றம் ஆகியவற்றின் வளர்ச்சியால் கடன் அளிக்கும் நிறுவனங்களின் பணி எளிதாகும். இந்த தொழில்நுட்பங்கள் மூலம் கடன் வேண்டுபவரின் திருப்பிச் செலுத்தும் திறனை கணித்து விரைவில் கடன் அளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் கடந்த 45 ஆண்டுகளில் 28 நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கி நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 18 மாதங்களில் மட்டும் 21 பேமெண்ட் வங்கிகளுக்கான அனுமதி அளிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.