இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை... தீவிரம் காட்டும் 'ஒன்வெப்'!

இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை... தீவிரம் காட்டும் 'ஒன்வெப்'!
இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை... தீவிரம் காட்டும் 'ஒன்வெப்'!

அதிகவேக இன்டர்நெட் சேவைக்காக ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை பூமிப் பந்தில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ள ஒன்வெப் நிறுவனம், இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை வழங்குவதற்காகவும் தீவிரம் காட்டி வருகிறது.

இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட 'ஒன்வெப்' நிறுவனம், பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை பல்வேறு தளங்களில் வழங்கி வருகிறது. 'ஒட்டுமொத்த பூமிப் பந்தையும் இணைக்கும் வகையில், பல செயற்கைக்கோள்களைக் கொண்டு உலகின் சிறு கிராமம் முதல் பெரு நகரங்கள் வரையில் அதிவேக வையர்லெஸ் பிராண்ட்பேன்ட் சேவையை எவ்விதமான தங்கு தடையின்றிக் கொடுக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளுடன் பயணிக்கிறோம்' என்கிறது ஒன்வெப் நிறுவனம். இதேபோன்ற ஒரு திட்டத்துக்காக தான் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மாஸ்குக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

ஆனால், இந்த ஒன்வெப் நிறுவனம் இதனை சத்தமில்லாமல் செய்து வருகிறது. சமீபத்தில் இந்த ஒன்வெப் நிறுவனம் திவாலாக இருந்த நிலையில், இங்கிலாந்து அரசுடன் இணைந்து இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் குழுமம் ஏலத்தில் எடுத்தார்கள். சுமார் 1 பில்லியன் டாலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்பின் ஒன்வெப் நிறுவனத்தின் பணிகள் வேகமடைந்துள்ளன. அதிகவேக இன்டர்நெட் சேவைக்காக ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை பூமிப் பந்தில் நிலைநிறுத்த ஒன்வெப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 36 செயற்கைக்கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த 36 செயற்கைக் கோள்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 110 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இருக்கிறது ஒன்வெப் நிறுவனம்.

2021 இறுதிக்குள் தனது சேவையை உலக நாடுகள் முழுவதும் வழங்க திட்டமிட்டு, அதற்கேற்ப செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. விரைவில் முழுவீச்சில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2022-ன் மத்தியில்தான் இந்தியாவுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஒன்வெப் கூறியிருக்கிறது.

ஒன்வெப் போலவே பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுமார் 3,236 செயற்கைக்கோள்களை செலுத்தவும், உலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்கவும் 2019ல் அமேசான் திட்டமிட்டிருந்தது. அதற்கு இப்போது பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) சமீபத்தில் ஒப்புதல் அளிக்க, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்து, முதற்கட்டமாக 578 செயற்கைக்கோள்களை அமேசானின் பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் மூலமாக வரும் நாட்களில் அனுப்ப அமேசான் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com