தமிழ்நாடு: பொதுமுடக்கத்தால் ஒரு கோடி கறிக்கோழிகள் தேக்கம்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக, ஒரு கோடி கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் கறிக்கோழி விலை கிலோ ஒன்றுக்கு 16 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதால், 7000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சி கோழி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடி கோழிகள் தேக்கமடைந்துள்ளன. தீவன மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், பெரும் இழப்பை தவிர்க்க விலையை குறைத்துள்ளதாக கோழி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 16 ரூபாய் குறைந்து, 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கறிக்கோழி உற்பத்தியாளர் வாங்கிலி சுப்பிரமணி கூறுகையில், உற்பத்தி செலவு கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயாக உள்ள நிலையில், விற்பனை வீழ்ச்சியால் 7000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து உள்ளதாக தெரிவித்தார்.