PT Web Explainer: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்வதை தடுக்கும் கப்பல்... நடப்பது என்ன?

PT Web Explainer: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்வதை தடுக்கும் கப்பல்... நடப்பது என்ன?
PT Web Explainer: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்வதை தடுக்கும் கப்பல்... நடப்பது என்ன?

பெட்ரோல், டீசல் விலை தொடரந்து உயர்ந்து வந்தது. சில மாநிலங்களில் லிட்டர் ரூ.100-ஐ தொட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பேசுபொருளாக மாறியது. இந்தச் சூழலில் தேர்தல் வந்தது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நெருங்கியது. ஐந்து மாநிலங்களில் மட்டும்தான் தேர்தல் என்றாலும், இந்தியா முழுவதிலும் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதனால் மார்ச் 1-ம் தேதி முழுவதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. (ஆனால், 2021-ம் ஆண்டு மட்டும் 26 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தபட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.7-க்கு மேலே உயர்த்தப்பட்டது).

புதுடெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91.17 ஆகவும், டீசல் ரூ.81.47 ஆகவும் இந்த மாதம் முழுவதும் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரவும் செய்தது. 70 டாலர் வரையிலும் கூட உயர்ந்தது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம் இல்லாமல் இருந்தது. மக்களும் பெட்ரோல், டீசல் விலை குறித்து மறந்துவிட்டனர்.

இந்த நிலையில், கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்களும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி விலை குறைக்கப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் விலை குறைக்கப்படுகிறது.

விலை குறைய காரணம்?

மார்ச் மாதம் 11-ம் தேதி கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 டாலர் வரை சென்றது. ஆனால், தற்போது 60 டாலர் வரை சரிந்தது. இந்த சரிவின் காரணமாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. ஆனால், ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் மூன்றாம் அலை வீச தொடங்கி இருக்கிறது. இதனால், ஐரோப்பாவில் சில நாடுகளில் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. போலந்தில் இரு வார லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஐரோப்பாவில் கச்சா எண்ணெய் தேவை குறைந்திருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்தது.

விலை சரிவு தொடருமா?

ஆனால், இந்த விலை குறைவு நீடிக்காது என்றே தோன்றுகிறது. உலகின் முக்கியமான நீர் வழிபாதையான சூயஸ் கால்வாயில் ஒரு கப்பல் மாட்டிக்கொண்டிருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் தேக்க நிலை உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஒரு கப்பல் மாட்டிக்கொண்டிருப்பதால் பெரும் டிராபிக் உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கால்வாயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் 44 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்தில்லை என சூயஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்தில் 10 சதவீதம் வரை இந்த கால்வாய் மூலமாகவே நடக்கிறது. இந்தக் கப்பல் மாட்டிக்கொண்டு மூன்று நாள்கள் ஆகிவிட்டன. இந்தக் கப்பலை மீட்பதற்கு மேலும் சில நாள்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் போக்குவரத்து முடங்கி இருப்பதால் விரைவில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அதேபோல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (ஒபெக்) கூட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை எப்படி வைத்திருக்க திட்டமிட்டிருக்கிறார் என்பதை பொறுத்தே கச்சா எண்ணெய் விலை இருக்கும்.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தனவா?

இடையில், கச்சா எண்ணெய் 70 டாலர் வரை அதிகரித்தது. ஆனாலும் விலை ஏற்றம் நடக்கவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு (ஒஎம்சி) ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை இழப்பு ஏற்பட்டிருக்க கூடும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த இழப்புகளை சமீபத்திய கச்சா எண்ணெய் சரிவில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்டி இருக்கும். அந்த இழப்பை சரிகட்டியபிறகே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் மீதான எக்ஸைஸ் வரி ரூ.13 மற்றும் ரூ.16 ஆக கடந்த மே மாதம் உயர்த்தப்பட்டது. இந்த வரியை குறைக்காவிட்டால் நிரந்தரமாக விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com