'மெர்சிடெஸ் பென்ஸ்' விற்பனை முறையில் புதிய உத்தி - வாடிக்கையாளர்களுக்கு நன்மை என்ன?

'மெர்சிடெஸ் பென்ஸ்' விற்பனை முறையில் புதிய உத்தி - வாடிக்கையாளர்களுக்கு நன்மை என்ன?
'மெர்சிடெஸ் பென்ஸ்' விற்பனை முறையில் புதிய உத்தி - வாடிக்கையாளர்களுக்கு நன்மை என்ன?

வாகன விற்பனையில் இதுவரை இருந்த பிஸினஸ் மாடலை மாற்றி அமைக்க மெர்சிடெஸ் பென்ஸ் முடிவெடுத்திருக்கிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை கவனித்துக்கொள்ளும். வாகனங்களை டீலர்களிடம் விற்பனை செய்வார்கள். டீலர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள். இதுதான் இதுவரையிலான பிஸினஸ் மாடல்.

இனி நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி டிஜிட்டலில் நடக்கும் மாற்றம் ஆட்டோமொபைல் துறையிலும் நடக்கும். தற்போது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஆன்லைன் விற்பனை இருக்கிறது. இனி ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனை மேலும் உயரும் என பென்ஸ் கருதுகிறது.

டீலர்கள் கிடையாதா?

டீலர்கள் கிடையாது. ஆனால் ஷோரூம்கள் இருக்கும். அவர்கள் பிரான்ஸைசி பார்ட்னர்கள் என அழைப்பார்கள். அங்கு மாடல் கார்களை பார்வையிடலாம், வாடிக்கையாளர் சேவை வழங்கலாம், விற்பனையை முழுமையடைய செய்யலாம், விற்பனைக்கு பிந்தைய சேவை வழங்கலாம். ஆனால் விலையை டீலர்கள் முடிவு செய்ய முடியாது. கூடுதல் தள்ளுபடி அல்லது எந்த சலுகையும் டீலர்கள் வழங்க முடியாது. வர்த்தக உறவு மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேதான் இருக்கும். இதன்மூலம் இந்தியா முழுமையாக வெளிப்படையான ஒரே விலையை நிர்ணயம் செய்ய முடியும்.

அதேசமயம், டீலர்களுக்கான ரிஸ்க் குறைகிறது. மொத்த ரிஸ்கையும் பென்ஸ் எடுத்துக்கொள்கிறது. வாகனங்களை பணம் கொடுத்து வாங்க வேண்டாம். லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட எந்த செலவுகளும் டீலர்களுக்கு கிடையாது. வாடிக்கையாளர்கள் சேவை வழங்குவது மட்டுமே டீலர்களின் பணி. விற்பனைக்கு ஏற்ப ஊக்கத்தொகையை பிரான்ஸைசி பார்ட்னர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களுக்கு?

பென்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை ஷோரூமில் உள்ள கார்களை மட்டுமே வாங்குவதற்கான சூழ்நிலை இருந்தது. ஒருவேளை வாடிக்கையாளர் விரும்பும் கார் அங்கு இல்லை என்றால், அங்கு இருக்கும் கார்களை மட்டுமே வாங்க வேண்டிய சூழல் இருந்தது. டீலர்களும் அங்கு இருக்கும் கார்களையே விற்பனை செய்ய திட்டமிடுவார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து கார்களையும், பிடித்த வண்ணங்களில் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பிடித்த கார்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம். அருகில் உள்ள ஷோரூம் அல்லது மத்திய கிடங்கில் இருந்து கார் வரவைக்கப்படும்.

தற்போது பல மாடல்களை ஆராயும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக பென்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுதவிர ஆன்லைனிலும் முன்பதிவு செய்ய முடியும்.

கடந்த சில ஆண்டுகளாகவே சொகுசு கார் சந்தையில் பெரிய தேக்க நிலை நிலவுகிறது. இதனால் பல டீலர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில டீலர்கள், தொழிலில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இந்த சிக்கலை களையவே புதிய திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

Retail of the future என்னும் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான செயல் திட்டத்தை நிறுவனம் வகுத்துவருகிறது. ஏற்கெனவே ஸ்வீடன் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளில் இதேபோன்ற திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாக பென்ஸ் தெரிவித்திருக்கிறது.

நீண்ட காலத்தை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் அனைத்து தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் என பென்ஸ் தெரிவித்திருக்கிறது. மேலும் அடுத்த சில மாதங்களில் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com