முழு முடக்கம்: பங்குச்சந்தையில் புதிய முதலீட்டாளர்கள்?
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பல துறைகள் கடும் நெருக்கடியை சந்தித்தன. ஆனால் ஸ்டாக் புரோக்கிங் துறையில், பொதுமுடக்கத்தால் பல சாதகமாக மாற்றங்கள் நிகழ்ந்தது.
பொதுமுடக்கம் காரணமாக, பங்குச்சந்தை சரியும் என நினைத்த நேரத்தில் எதிர்பாரா விதமாக பங்குச்சந்தை உயர்ந்தது. மட்டுமன்றி பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்ததால், பங்குச்சந்தை முதலீடு குறித்து புதிதாகவும் நிறைய பேர் தெரிந்துகொள்ள தொடங்கினார்கள். இவற்றின் காரணமாக கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் பல புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக 2020-ம் ஆண்டு மட்டும் 1 கோடிக்கும் மேலான புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு வந்தனர். பங்குச்சந்தை நன்றாக இருந்ததால் பல நிறுவனங்களின் ஐபிஓவும் வெளியாகின.
2021 ம் ஆண்டு இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை என்றாலும்கூட, முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் லாக்டவுன் அமலில் உள்ளது. அதனால் கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் புதிய வாடிக்கையாளர்கள் வரவு இருக்கிறதா என தெரிந்துகொள்ள நினைத்தோம். இதற்காக, சென்னையில் உள்ள ஜீபு ஷேர்ஸ் அண்ட் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் விஜயகுமாரிடம் உரையாடினோம்.
"ஒப்பீட்டளவில் இப்போது வரும் புதிய வாடிக்கையாளர்கள் பலரும், கடந்த ஆண்டை விடவும் குறைவாக பங்குச்சந்தை முதலீடு /வர்த்தகத்துக்கு வருகின்றனர். இதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு பங்குச்சந்தை பெரிய சரிவை சந்தித்த பிறகு உயரத்தொடங்கியது என்பது முக்கிய காரணம். அந்த ஏற்றம் ஏற்பட்டபோதுதான், பல புதியவர்கள் பங்குச்சந்தையில் கலந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் தற்போது ஏற்றம் அப்படியே இல்லை. பங்குச்சந்தை பக்கவாட்டில் வர்த்தகமாகிறது. அதனால் ஒப்பீட்டளவில் குறைவாகவே புதியவர்கள் வருகின்றனர்.
கடந்த ஆண்டு, பங்குச்சந்தைக்கு சிறப்பான ஆண்டு. கோவிட் 19, பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. சொல்லப்போனால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் குடும்பத்தில் அல்லது நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் தினசரி நடக்கும் வர்த்தகத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் சீராக பங்குச்சந்தை உயர்ந்து, இப்போதும் ஓரளவு உயர்ந்து வருகிறது. ஒருவேளை கோவிட் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், கடந்த வருடத்தை விட பெரிய அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்கும்.
இருந்தாலும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் இப்போதைக்கு மிகவும் குறைவான சதவீதத்திலே இருப்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு புதிய முதலீட்டாளர்களின் வருகை அதிகம் இருக்கும் என கணிக்கிறோம்" எனக் கூறினார் அவர்.
- வாசு கார்த்தி

